பக்கம்:மணி பல்லவம் 1.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

மணிபல்லவம்

கப்பல் காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தை அடைந்தபோது அதன் தலைவனுக்கு நன்றி கூறிவிட்டுக் கீழே இறங்கினான் இளங்குமரன். அவனை அடுத்துக் கீழே இறங்கிய சுரமஞ்சரி அவனிடமோ, கப்பல் தலைவனிடமோ, சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே வேகமாக முன்னால் நடந்து செல்லலானாள். இளங்குமரனும் விரைவாக அவளைப் பின்தொடர்ந்து அருகில் சென்று நின்று கொண்டு “பெண்ணே! இப்படிச் சினத்தோடு முகத்தை முறித்துக் கொண்டு போவதனால் ஒரு பயனுமில்லை. என்னுடைய உதவியை இப்போதும் நான் உனக்கு அளிப்பதற்குச் சித்தமாயிருக்கிறேன். நீ விரும்பினால் உன்னுடைய மாளிகைவரை உனக்குத் துணை வருவேன்” என்றான். இதைக் கேட்ட பின்பும் சுரமஞ்சரியின் முகம் மலரவில்லை; மனம் நெகிழவில்லை.

“என்மேல் அன்பு செலுத்துகிறவர்களின் உதவிதான் எனக்கு வேண்டும். என்னை ‘எவளோ ஓர் அப்பாவிப் பெண்’ என்று நினைத்து வெறும் கருணையை மட்டும் காண்பிக்கிறவர்களிடம் நான் உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய மாளிகைக்குப் போய்ச் சேர்வதற்கு வழி எனக்குத் தெரியும்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பாராமலே எடுத்தெரிந்து பேசிவிட்டு முன்னைக் காட்டிலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி. அவள் அவனிடம் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வதைக் கண்டு அருகில் நின்ற சிலர் பெரிதாகச் சிரித்தனர். தன்னை ஏளனம் செய்கிற தொனியில் அவர்கள் சிரிப்பு ஒலித்தாலும் இளங்குமரன் அதைக் கேட்காதவன் போல் வேறு பக்கமாகத் திரும்பி நடந்தான். ஏற்றுமதி செய்வதற்குக் குவித்த பொருள்களும், இறக்குமதி செய்து குவித்த பொருள்களுமாக அம்பாரம் அம்பாரமாய்ப் பல்வேறு பண்டங்கள் நிறைந்திருந்த துறைமுகப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்தான் இளங்குமரன். அன்று காலையிலிருந்தே அவன் மனமும், எண்ணங்களும் சுறுசுறுப்பாயிருந்தன. அங்கே துறைமுக வாயிலில் இருந்த ‘பார்வை மாடம்’ என்னும் மேடையில் ஏறி நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/281&oldid=1142105" இலிருந்து மீள்விக்கப்பட்டது