பக்கம்:மணி பல்லவம் 1.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

மணிபல்லவம்

மட்டும் தெரியும்’ என்று முரட்டுப் பதிலாகக் கூறி அவரை மடக்கலாமா என நினைத்தான் இளங்குமரன். ஆனால் உடலும் மனமும் குன்றிப்போய் அத்தனை பேருக்கு முன் அவமானப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் வாய் திறந்து பேசும் துணிவையே இழந்திருந்தான் அவன்.

‘உனக்கு என்ன தெரியும்? உனக்கு எதைப் பற்றி ஞானம் உண்டு?’ என்று அவன் உள்ளத்தில் பெரிதாய் எழுந்து இடையறாமல் ஒலிக்கலாயிற்று ஒரு கேள்வி. அந்தக் கேள்வியில் அவன் உள்ளத்தின் செருக்கெல்லாம் துவண்டு ஒடுங்கியது.

சுற்றிக் கூடியிருந்த கூட்டத்திலிருந்து வாய்க்கு வாய் தன்னை ஏளனம் செய்து இழந்து பேசும் குரல்கள் ஒலிப்பதை அவன் செவிகள் கேட்டன. அந்தக் கணத்தில் அவன் உடம்பும் மனமும், அதற்கு முன் எப்போதுமே அடைந்திராத கூச்சத்தை அடைந்தன. வெட்கத்தை உணர்ந்தன. வேதனையை அனுபவித்தன.

இந்திர விகாரத்தின் வாயிலில் இருந்து அந்தத் துறவியைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்தபோது தன்னிடமிருந்த மிடுக்கும், கம்பீரமும் இப்போது போன இடம் தெரியாமல் பொலிவிழந்து நின்றான் இளங்குமரன்.

“மறுபடி எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் இப்படி வெறுமையான மனத்தோடு, வெறுங்கையை வீசிக்கொண்டு வராதே தம்பீ!

மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர். மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே” என்று அவனுக்குக் கேட்கும் படி உரத்த குரலில் கூறிவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார்-

அந்தப் பௌத்த சமயத்துறவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/287&oldid=1142112" இலிருந்து மீள்விக்கப்பட்டது