பக்கம்:மணி பல்லவம் 1.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மணிபல்லவம்

விரும்பினான். அப்படி அறிந்து கொள்ளாமல், அவர்கள் தன்னிடமிருந்தோ, தான் அவர்களிடம் இருந்தோ, தப்பிச் செல்லலாகாதென்று உறுதி செய்து கொண்டிருந்தான் அவன். இரண்டாவது காரணம், முதலில் தன்னால் கண்களில் மண் தூவப் பெற்ற எதிரியையும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வை தெரிந்து மற்றவனோடு வந்து சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்குவதற்குள் ஒருவனை மட்டும் பிரித்துச் சிறிது தொலைவு விலக்கிக் கொண்டு போகலாமே என்பதும் அவன் திட்டமாயிருந்தது.

ஆனால் இளங்குமரன் எவ்வளவுக்குத் தன்னோடு போரிட்டவனைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள தீப ஒளியில் கொண்டு போய் நிறுத்த முயன்றானோ அவ்வளவுக்கு முன்வரத் தயங்கி இருட்டிலேயே பின்னுக்கு இழுத்து அவனைத் தாக்கினான் அவனுடைய எதிரி. இதனால் இளங்குமரனின் சந்தேகமும் எதிரியை இனங்கண்டு கொள்ள விரும்பும் ஆவலும் விநாடிக்கு விநாடி வேகமாகப் பெருகியது. தீபஒளி இருக்கும் பக்கமாக இளங்குமரன் அவனை இழுப்பதும் இருள் மண்டியிருக்கும் பக்கமாகவே அவன் இளங்குமரனைப் பதிலுக்கு இழுப்பதுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.

“தைரியசாலிகள் வெளிச்சத்துக்கு வந்து தங்கள் முகத்தைக் காட்ட இவ்வளவு கூசுவது வழக்கமில்லையே!” என்று ஏளனமாக நகைத்துக் கொண்டே இளங்குமரன் கூறியதன் நோக்கம் எதிராளி கூறும் பதிலின் மூலமாக அவன் குரலையாவது கேட்டு நிதானம் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஆனால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எதிரி வாயால் பேசவில்லை. தன் ஆத்திரத்தையெல்லாம் சேர்த்துக் கைகளால் மட்டுமே பேசினான். மீண்டும் இளங்குமரன் அவன் தன்மானத்தைத் தூண்டி விடும் விநயமான குரலில் “இவ்வளவு தீரமாக எதிர்த்துப் போரிடும் என்னுடைய எதிரி கேவலம் ஓர் ஊமையாக இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று வாயைக் கிளற முயன்றான். அதற்கும் எதிரியிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/29&oldid=1141626" இலிருந்து மீள்விக்கப்பட்டது