பக்கம்:மணி பல்லவம் 1.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

293

சிறிது நேர அமைதிக்குப் பின் “நீ மிகவும் பசித்துக் களைத்துப் போயிருக்கிறாய்” என்று இளங்குமரனை நோக்கிச் சிரித்தவாறே கூறினார் நாங்கூர் அடிகள். அவருடைய சிரிப்பு எதிரே இருப்பவர்களின் அகங்காரத்தை அழித்து விடும் ஆற்றல் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.

“அவன் பசித்திருப்பது மெய்தான்; ஆனால் அந்தப் பசி சோற்றினாலும், நீரினாலும் தீராத பசி, ஞானப்பசி. நீங்கள் தான் அந்தப் பசியைத் தீர்த்தருள வேண்டும்” என்றார் நீலநாக மறவர். அடிகள் முகம் மலர நகைத்தார். பின்பு மெல்லக் கேட்டார்.

“பசி தீர்க்கிறவர்களுக்கு இந்தப் பிள்ளை என்ன விலை கொடுப்பானோ?”

“மனம் நிறைய அறியாமையையும், ஆணவத்தையும் தவிரக் கொடுப்பதற்கு வேறொன்றும் தான் கொண்டு வரவில்லையே ஐயா!” என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே பதில் கூறினான் இளங்குமரன். அப்போது அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அழுகிறாற் போல் குரல் நைந்து ஒலித்தது.

அடிகள் இளங்குமரனுக்கு அருகில் வந்து அவனைத் தழுவிக் கொண்டார்.

“நீ வேறு ஒன்றும் விலை தரவேண்டாம். உன்னையே எனக்குக் கொடு. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளை நிலமாக இரு. அதுவே போதும்.”

“என் பாக்கியம்” என்று கூறியவாறே மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன்.

“இந்தப் பாதங்களை நன்றாகப் பற்றிக்கொள். இவற்றை விட்டுவிடாதே. உன் அறியாமையும் ஆணவமும் இவற்றின் கீழ்த்தாமே. கரைந்து போகும்” என்று கூறிவிட்டுத் தேரில் ஏறினார் நீலநாக மறவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/294&oldid=1142123" இலிருந்து மீள்விக்கப்பட்டது