பக்கம்:மணி பல்லவம் 1.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31

வழிப்பறி செய்தலும் ஆறலை கள்வர்கள்[1] செய்யும் பிற கொடுமைகளும் எயினர் கூட்டத்தினருக்குப் பொழுது போக்கு விளையாட்டுக்கள் போன்றவை என்றும் அவன் அறிந்திருந்தான். ஒளிப்பாம்புகள் நெளிந்து கொத்துவதற்குப் படமெடுத்து நிற்பது போல் தன்னை நோக்கி ஓங்கப்பட்டிருக்கும் அந்த வாள்களின் நுனிகளில் அவனுடைய உயிரும் உணர்வுகளும் அந்தக் கணத்தில் தேங்கி நின்றன. இத்தகைய குத்து வாள்களைக் ‘குறும்பிடி’ அல்லது ‘வஞ்சம்’ என்று குறிப்பிடுவார்கள். ‘வஞ்சம் என்பது இப்போது என் நிலையை வைத்துப் பார்க்கும் போது இவற்றுக்கு எவ்வளவு பொருத்தமான பெயராய்ப்படுகிறது. வஞ்சங்களின் நுனியில் அல்லவா என் உயிர் இப்போது இருக்கிறது!’ என்று ஏலாமையோடு நினைக்கும் போது இளங்குமரனுக்குப் பெருமூச்சு வந்தது. காவிரி அரவணைத்தோடும் அப்பெரிய நகரத்தில் எத்தனையோ ஆண்டுகள் வீரனாகவும், அறிஞனாகவும், அழகனாகவும், வாழ்ந்து வளரத் தன் மனத்தில் கனவுகளாகவும், கற்பனைகளாகவும், இடைவிடாத் தவமாகவும், பதிந்திருந்த ஆசைகள் யாவும் அந்த வாள்களின் நுனியில் அழிந்து அவநம்பிக்கைகள் தோன்றுவதை அவன் உணர்ந்தான்; ஏங்கினான்; உருகினான்; என்ன செய்வதெனத் தோன்றாது தவித்துக் கொண்டே நின்றான். ஓர் அணுவளவு விலகி அசைந்தாலும் அருட்செல்வ முனிவர் பரிந்து பாதுகாத்து வளர்த்துவிட்ட தன் உடலின் குருதி அந்த வாள்களின் நுனியில் நனையும் என்பதில் - ஐயமே இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவன் மனத்தில் நினைவுகள் வேகமாக ஓடலாயின.

“அன்னையே! கண்களால் இதுவரை காணாத உன்னை நினைத்து நினைத்து அந்த நினைப்புக்களாலேயே நெஞ்சில் நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உள்ளத்திரையிலே எண்ணக் கோலமாய் இழைத்து


  1. சிறு வழிகளிலும் பெரு வழிகளிலும் போவோரை அலைத்துத் துன்புறுத்தும் கள்வருக்கு அக்காலப் பெயர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/32&oldid=1141630" இலிருந்து மீள்விக்கப்பட்டது