பக்கம்:மணி பல்லவம் 1.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மணிபல்லவம்

குதிரையில் சுற்றுகிறான். அப்பாவுக்கோ அவன் தன்னையே காத்துக் கொள்வானோ மாட்டானோ என்று பயமாயிருக்கிறது!” என்று கூறிச் சிரித்தாள் முல்லை.

“பயம் ஒன்றுமில்லையம்மா எனக்கு. நீ இன்று காலை நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் போய்ப் படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டுமென்றாயே! நான் இங்கே இந்த முனிவருக்குத் துணையாக இருந்து இவரைக் கவனித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். கதக்கண்ணன் வந்திருந்தால் நீ அவனை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட வசதியாயிருக்குமே என்றுதான் பார்த்தேன்.”

“அண்ணன் வராவிட்டால் என்ன, அப்பா? இதோ இவரை உடன் அழைத்துக்கொண்டு பூதசதுக்கத்துக்குப் புறப்படுகிறேனே. இவரைவிட நல்ல துணை வேறு யார் இருக்க முடியும்?” என்று இளங்குமரனைச் சுட்டிக் காட்டிக் கேட்டாள் முல்லை.

இளங்குமரன் தனக்குள் மெல்ல நகைத்துக் கொண்டான்.

“இவனையா சொல்கிறாய் அம்மா? இவன் உனக்குத் துணையாக வருகிறான் என்பதைவிட வீரசோழிய வளநாடுடையார் மகள் இவனுக்குத் துணையாகச் செல்கிறாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஊர்ச் சண்டையும் தெரு வம்பும் இழுத்து, எவனோடாவது அடித்துக் கொண்டு நிற்பான். நீ இவனைச் சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு போக நேரிடும்.”

“அப்படியே இருக்கட்டுமே அப்பா! இவருக்குத் துணையாக நான் போகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் முல்லை.

“முல்லை! என்னைக் குறை கூறுவதென்றால் உன் தந்தைக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடுகிற கொண்டாட்டம் வந்துவிடும். அவருடைய ஏளனத்தை எல்லாம் வாழ்த்துக்களாக எடுத்துக் கொண்டு விடுவேன் நான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/47&oldid=1141648" இலிருந்து மீள்விக்கப்பட்டது