பக்கம்:மணி பல்லவம் 1.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மணிபல்லவம்

“முனிவர் பெருமானுக்குத் தெரியாத மெய்யில்லை. இன்பமும், துன்பமும் நிறைந்த நினைவுகளைச் சுமப்பதுதானே உயிர்ப் பயணம்? முடிவற்ற அந்தப் பயணத்தில் அவ்வாறு நினைவுகளைச் சுமப்போரைக் கண்டும் நாம் சுமையின்றி நடந்து போகலாமென எண்ணி ஒதுங்கலாமா அடிகளே?”

“ஒதுங்க வேண்டுமென்று நான் கூறவில்லை, உடையாரே. இந்தப் பிறவிக்குப் போதும் போதுமென்று சொல்கிறாப் போல அவ்வளவு நினைவுச் சுமைகளை ஏற்கனவே கனமாகச் சுமந்து கொண்டிருக்கிறேன் நான்.”

இவ்வாறு கூறிவிட்டு முகத்தில் ஏக்கமும்; ஆற்றாமையும் தோன்ற நெட்டுயிர்த்தார் முனிவர்.

“பிறரிடம் ஒருமுறை மனம் திறந்து பேசினாலாவது உங்கள் நினைவுச் சுமையின் கனம் குறையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது முனிவரே!”

“செய்யலாம் உடையாரே! ஆனால் எல்லாச் செய்திகளையும் எல்லாரிடமும் மனம் திறந்து பேசிவிட முடிவதில்லை. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாகத் திறந்து எண்ணிப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறதே...”

இதைக் கேட்டு வீரசோழிய வளநாடுடையார் இரைந்து வாய்விட்டுச் சிரித்தார்.

“முனிவரே! இந்த மாபெரும் நகரத்தின் புற வீதியில் சாதாரணக் காவல் வீரனாகச் சுற்றிய நாள் தொடங்கிப் பின்பு காவற்படைத் தலைவனாகி இன்று ஓய்வு பெற்றிருக்கும் நாள் வரை உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்னும் நீங்கள் என்னிடம் சில செய்திகளை மறைத்தே பேசி வருகிறீர்கள். துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள். பலமுறை அவற்றை அறிய முயன்றும் தொடர்ந்து நான் ஏமாந்து கொண்டே வருகிறேன். இன்றும் அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/61&oldid=1141677" இலிருந்து மீள்விக்கப்பட்டது