பக்கம்:மணி பல்லவம் 1.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மணிபல்லவம்

இந்தப் பிள்ளையாண்டான் பொருத்தமான கணவனாக இருப்பானென்று வெகு நாட்களாக எனக்கு ஒரு நினைப்பு இருக்கிறது. ஆனால் அந்த நினைப்பு ஒன்றை மட்டுமே தூண்டுதலாகக் கொண்டு அதை நான் செய்து விடுவதற்கில்லை. இளங்குமரனுடைய பிறப்பிலிருந்து எதிர்காலம் வரை ஓரளவு தீர்மானமாகத் தெரிந்து கொண்ட பிறகு தான் முல்லையை அவன் கையில் ஒப்படைக்க நான் துணிய முடியும். இப்படியே இப்போதிருப்பதுபோல் ஊர் சுற்றும் முரட்டுப் பிள்ளையாக அவன் எப்போதும் இருப்பதானால் முல்லையை இளங்குமரனோடு தொடர்புபடுத்தி நினைப்பதையே நான் விட்டுவிட வேண்டியது தான். செய்யலாமா கூடாதா என்று இந்த எண்ணத்தை மனத்தில் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதனால்தான் உங்களிடம் இளங்குமரனைப் பற்றி அடிக்கடி விசாரிக்க நேர்ந்தது” என்று இந்தச் செய்தியை முனிவரிடம் சொல்லி முடித்தபோது மனத்திலிருந்த பாரத்தை இறக்கி வைத்தாற் போலிருந்தது வீரசோழிய வளநாடுடையார்க்கு. அவர் அதற்கு விளக்கமான பதிலை எதிர்பார்த்து முனிவருடைய முகத்தை நோக்கினார். சிறிது நேரம் முனிவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் எதற்கோ சிந்தித்துத் தயங்குவது போலிருந்தது.

“உடையாரே! உங்கள் கேள்விக்கு மறுபடியும் பழைய பதிலைத்தான் கூற வேண்டியிருக்கிறது. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறது. ஒரு மனிதன் உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளுவது ஞானம். ஒரு மனிதனை உலகம் முழுமையாகப் புரிந்து கொள்வது அதிர்ஷ்டம். இளங்குமரன் ஒரு காலத்தில் இவ்விரண்டு பாக்கியங்களையுமே பெறப் போகிறான் என்றாலும் இன்றைக்கு அவன் வெறும் இளைஞன். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையிலுள்ள முனிவர் ஒருவரால் வளர்த்து விடப்பட்ட முரட்டுப் பிள்ளை. இதுவரையில் அவனது உடம்பைத் தவிர உள்ளத்தை அதிகமாக வளர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/63&oldid=1141679" இலிருந்து மீள்விக்கப்பட்டது