பக்கம்:மணி பல்லவம் 1.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67

“சொல்! சொல்! நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிரு. உன் கை, கால்களை முறித்துப் போடாமல் இங்கிருந்து நாங்கள் கிளம்பப் போவதில்லை.”

இப்படி அவர்கள் அறைகூவவும் பதிலுக்கு இளங்குமரன் அறைகூவவும் இருபுறமும் பேச்சுத் தடித்துக் கைகலப்பு நெருக்கமாகிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிக் கூட்டமும் கூடத் தொடங்கிவிட்டது. இடமோ கலகலப்பு மிகுந்த நாளங்காடிப் பகுதி. காலமோ இந்திர விழாக் காலம். கூட்டம் கூடுவதற்கு என்ன குறை? இந்நிலையில் கையில் படையலிட்டு வந்த பொருள்களடங்கிய பாத்திரத்துடனே இருந்த முல்லை மருட்சியோடு என்ன செய்வதென அறியாது திகைத்துப் போய் நின்றாள். தாக்குவதற்கு வந்தவர்கள் கொதிப்புடனும் அடக்க முடியாத ஆத்திரத்துடனும் வந்திருப்பதாகத் தெரிந்தது. அவர்களுடைய முரட்டுப் பேச்சுக்குச் சிறிதும் தணிந்து கொடுக்காமல் இளங்குமரனும் எடுத்தெறிந்து பேசுவதைக் கண்ட போது முல்லைக்கு இன்னும் பயமாக இருந்தது.

‘புறப்படும்போது தந்தையார் எச்சரிக்கை செய்தது எவ்வளவு பொருத்தமாக முடிந்துவிட்டது. இவரைக் கூட்டிக் கொண்டு வந்தால் இப்படி ஏதாவது நேருமென்று நினைத்துத்தானே தந்தை அப்படிக் கூறினார்” என்று எண்ணி நினைத்துப் பார்த்தது அவள் பேதை மனம்.

வரைந்து கொண்டிருந்த ஓவியத் திரைச்சீலையை மெல்ல சுருட்டிக் கொண்டு பயந்தாங்கொள்ளியாக ஒதுங்கியிருந்த ஓவியன் மணிமார்பன் ‘கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற்போகுமோ’ என்பதுபோல் நம்பிக்கை இழந்து நின்றான்.

‘இந்த முரட்டு மனிதரின் பிடிவாதத்தை இளக்கி ஒரு விதமாகப் படம் எழுதிக் கொள்ளச் சம்மதம் பெற்றேன். நூறு பொற் கழஞ்சுகளை அந்தப் பெண்ணிடம் பெற்று விடலாம் என்று ஆசையோடு ஓவியத்தை வரைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/68&oldid=1141688" இலிருந்து மீள்விக்கப்பட்டது