பக்கம்:மணி பல்லவம் 1.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

73

தெரிந்து கொள்ள முடியாமல் கூட்டத்தினர் அவளைப் பின்புறம் தள்ளி விலக்கியிருந்தனர்.

கூட்டம் ஒருவாறு கலையத் தொடங்கியபோதுதான் முன்னுக்குப் போய் அவர்களுக்குள் தாக்குதல் நடந்த பகுதியில் இளங்குமரனைக் காணலாமென்ற தவிப்பு அவளுக்கு உண்டாயிற்று. ஆனால் உரிய இடத்துக்கு வேகமாகச் சென்று பார்த்தபோது தன் தவிப்புக்கும் ஆவலுக்கும் பயன் இல்லை என்று அவள் தெரிந்து கொண்டாள்.

அங்கு இளங்குமரனைக் காணவில்லை. அவனைப் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியனையும் காணவில்லை. ‘அதற்குள் எங்கு போயிருப்பார்கள் இவர்கள்?’ என்ற திகைப்புடன் அவள் நின்றபோது அந்த இடத்திலிருந்து பல்லக்குகள் இரண்டு புறப்படுவதைக் கண்டாள். பல்லக்குகளைச் சுற்றி வெண்சாமரங்கள், பட்டுக்குடைகள், ஆலவட்டங்கள், மயிற்கண் பீலி பதித்த தோரணம் இவற்றைத் தாங்கிய ஏவலாட்கள் பணிவாக நின்று கொண்டிருந்தனர். முதற் பல்லக்கைப் பின்தொடர்கிறாற்போல் சென்ற இரண்டாவது பல்லக்கைக் கண்டதும் முல்லைக்கு வியப்பு ஏற்பட்டது. அப் பல்லக்கைச் சுமந்து கொண்டிருந்தவர்கள் தாம் சற்றுமுன் இளங்குமரனோடு சண்டைக்கு வந்த யவனர்கள் என்பதை மிக எளிதாக அடையாளம் கண்டு கொண்டாள் அவள். அதைப் பார்த்ததும் முதலில் அவள் மனம் வீணான பயங்கரங்களை நினைத்தது. ‘இளங்குமரனை அடித்துத் தாக்கி இந்தப் பல்லக்கில் தூக்கிப் போட்டுக் கொண்டு இவர்கள் போகிறார்களோ என்று நினைத்து மனம் கொதித்தாள் அவள். ஆனால் அப்படி இல்லை என்பது பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அவளுக்குத் தெரிந்தது. அடுத்த சில விநாடிகளில் பல்லக்கைச் சூழ்ந்திருந்தவர்கள் சிறிது விலகியதால் இளங்குமரனே அதற்குள் உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். ஆனால் இளங்குமரனுடைய பார்வை அவள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/74&oldid=1141696" இலிருந்து மீள்விக்கப்பட்டது