பக்கம்:மணி பல்லவம் 1.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

மணிபல்லவம்

“உங்களிடம் நிதானம் குறைவாயிருக்கிறது. பொறுமை சிறிதுமில்லை. பதற்றம் அதிகமாக இருக்கிறது.”

“தெரிந்து சொல்லியதற்கு நன்றி! ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தத் தகுதி வாய்ந்த பெரியவர்கள் எனக்கு இருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் காரியத்தைப் பார்க்கலாம்.”

அவளுக்கு இளங்குமரன் சுடச்சுடப் பதில் கூறினான். எத்துணை முறை சிரித்துச் சிரித்துப் பேசினாலும் தன்னைப் பற்றிய நளினமான நினைவுகளை அவன் மனத்தில் பயிர் செய்ய முடியுமென்று தோன்றவில்லை சுரமஞ்சரிக்கு. இளங்குமரன் அழகுச் செல்வனாக இருந்தான். ஆனால் அந்த அழகு நிலத்தில் அவள் இறைக்க முயன்றும் குன்றாமல் அகம்பாவம் ஊறிக் கொண்டிருந்தது. அது வற்றினால் அல்லவா அங்கே அவள் பயிர் செய்யத் துடிக்கும் இனிய உறவுகளைப் பயிர் செய்ய முயலலாம்? சுரமஞ்சரி அவனிடம் தனக்கு ஏற்பட்ட ஆற்றாமையை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “வசந்தமாலை! இவரை வற்புறுத்தாதே. எப்படி விரும்புகிறாரோ அப்படியே நடந்து வரட்டும்” - என்று சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்தாள். இளங்குமரன் தன் போக்கில், மணிமார்பன் பின் தொடரக் கம்பீரமாக வீரநடை நடந்து சென்றான். மாளிகையைச் சூழ்ந்திருந்த பூம்பொழிலில் மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. புள்ளிமான்கள் துள்ளித் திரிந்து கொண்டிருந்தன. சிறுசிறு பொய்கைகளில் அல்லியும் கமலமும், குவளையும், நிறையப் பூத்திருந்தன. அழகுக்காக மரஞ்செடி கொடி வைத்துச் செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த செய் குன்றுகள் அங்கங்கே பூம்பொழிலினிடையே இருந்தன. மணிமார்பனோடு பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன், “மணிமார்பா! இங்கேயே ஓரிடத்தில் நான் நின்று கொள்கிறேன். நீ ஓவியத்தை நிறைவு செய்யத் தொடங்கு. நமக்கு மாளிகைக்குள் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/87&oldid=1141749" இலிருந்து மீள்விக்கப்பட்டது