பக்கம்:மணி பல்லவம் 1.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

மணிபல்லவம்

அழகு வேட்கை மிக்க தன் கண்களால் நன்றாகப் பார்த்தான் மணிமார்பன்.

“நல்ல வேளையாக நீங்கள் வந்தீர்கள் அம்மா! உங்கள் சகோதரியார், ‘நீங்கள் யார்? உங்களை யார் இந்த மாளிகைக்குள் வரவிட்டது?’ என்று கேள்வி கேட்டு எங்களை வெளியே துரத்துவதற்கு இருந்தார். நீங்கள் வராவிட்டால் அந்தக் காரியத்தைச் செய்தே இருப்பார்” என்று ஓவியன் சுரமஞ்சரியைப் பார்த்துக் கொண்டே கூறியபோது, ‘பேச்சும் சிரிப்பும் இப்போது வேண்டாதவை! காரியம் நடக்கட்டும்’ என்று குறிப்பும் கடுமையும் தோன்ற அவனை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அந்த வலிய பார்வையே மணிமார்பனை அடக்கியாண்டது. அவன் மௌனமாக மேலே வரையலானான்.

“வானவல்லி! நேற்று கடற்கரையில் அற்புதமாக மற்போர் செய்ததாகக் கூறினேனே, அந்த வீரர் இவர்தான்” என்று தன் சகோதரிக்கு இளங்குமரனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் ஓவியம் நிறைவேறியது. இன்னும் சில நுணுக்கமான வேலைப்பாடுகள் ஓவியத்தில் எஞ்சியிருந்தாலும் ‘அவற்றைச் செய்வதற்கு இளங்குமரன் உடனிருக்க வேண்டியதில்லை’ என்று மணிமார்பன் சொல்லி விட்டான்.

ஓவியம் முடிந்ததும் வானவல்லி இளங்குமரனுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு, “என்னை மன்னிக்க வேண்டும்! என் சகோதரி சுரமஞ்சரிதான் உங்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரியாமல் அப்படிக் கேட்டுவிட்டேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முன்பே விவரம் தெரிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்க மாட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டாள்.

இளங்குமரன் வானவல்லியின் குயில் மொழிக் குரலைக் காது கொடுத்துக் கேட்காதவன் போல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/97&oldid=1141763" இலிருந்து மீள்விக்கப்பட்டது