பக்கம்:மணி பல்லவம் 2.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

மணிபல்லவம்

“இதே கை இன்று தவறிவிட்டது என்பதைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.”

“எங்கே தவறியது? எதற்காகத் தவறியது? யாரிடம் தவறியது? சொல்லுங்கள். நாளைக்குச் சூரியோதயத்துக்குள் உங்கள் கையை இப்படி ஆக்கிய கை எதுவோ அதை உணர்வு செத்துப் போகச் செய்துவிடுகிறேன்” என்று பரபரப்போடு வினாவிய பெருநிதிச் செல்வரை நகைவேழம்பர் சொல்லிய பதில் திடுக்கிட வைத்தது.

“அந்தக் கையை உணர்விழக்கச் செய்வதற்கு உங்களாலும் முடியாது! உங்கள் பாட்டனார் வந்தாலும் முடியாது!”

“ஏன் முடியாது? என்னையும் உங்களையும் போலச் சூழ்ச்சியும் திறனும் உள்ளவர்களால் அழிக்க முடியாத வலிமைகூட இந்த நகரத்திலே இருக்கிறதா?”

“இருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் என்னுடைய இந்தக் கை இப்படி வீங்குமா ?”

“யார் என்றுதான் சொல்லுங்களேன். நடந்ததை ஒன்றும் சொல்லாமல் ஆத்திரமாகப் பேசிக் கொண்டே போவதில் என்ன பயன்?”

“நகைவேழம்பரின் குரல் சிறிது ஒலி குன்றியதும் பெருநிதிச் செல்வரின் குரல் பெரியதாய் ஒலித்தது. சுரமஞ்சரியும் அவள் தோழியும் முயற்சி செய்து ஓவியனை விடுவித்து மணிமாலை பரிசளித்ததிலிருந்து தொடங்கித் தான் ஓவியனைப் பின் தொடர்ந்து சென்றபின் ஆலமுற்றத்தில் நிகழ்ந்தது வரை, எல்லாவற்றையும் கூறினார் நகை வேழம்பர். நீலநாக மறவர் தம்முடைய கையைப் பற்றியதையும், தாம் அவரால் கீழே பிடித்துத் தள்ளப் பட்டதையும் மேலும் ஆத்திரம் மூளும் விதத்தில் விவரித்துச் சொன்னார் அவர்.

“நமக்கு எதிரிகள் வேறெங்கும் இல்லை. நம்முடைய மாளிகையிலேயே இருக்கிறார்கள்” என்று குறிப்பாகச் சொல்லிப் பெருநிதிச் செல்வரின் கோபமெல்லாம் சுரமஞ்சரியின் மேல் திரும்புமாறு செய்ய முயன்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/102&oldid=1149902" இலிருந்து மீள்விக்கப்பட்டது