பக்கம்:மணி பல்லவம் 2.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

413

சொல்லிக் குறிப்புக் காட்டுவதைப் புரிந்து கொண்டாலும் தங்களுக்குப் படியளப்பவராகிய பெருநிதிச் செல்வரின் ஆணையின்றி எப்படி மேலே செல்வதெனத் தயங்கினர். அவர்களுடைய இந்தத் தயக்கத்தைக் கண்டு மேலே நின்ற நகைவேழம்பர் சிரித்தார்.

“உங்களுக்குக் கட்டளையிட வேண்டியவரே இப்போது என்னுடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறார். இந்தச் சமயத்தில் நீங்கள் அவரை எதிர்பார்த்துத் தயங்குவதில் பயனில்லை. நீங்கள் எல்லாரும் வெளியேறினால் நானும் அவரும் பேசிக் கொள்வதற்குத் தனிமை வாய்க்கும்.”

நகைவேழம்பர் இப்படிக் கூறிய பின்பும் அவர்கள் தயங்கியபடியே நின்றார்கள். பெருநிதிச் செல்வரே இந்தத் தயக்கத்தைத் தவிர்ப்பதற்கு முன் வந்தவராய், “அவர் சொல்கிறபடியே செய்யுங்கள்” என்று ஊழியர்கள் பக்கம் திரும்பி மெல்லக் கூறினார்.

ஊழியர்கள் படியேறி மேலே வந்தனர். “நில்லுங்கள்!” நீங்கள் செய்ய வேண்டிய வேலையொன்று மீதமிருக்கிறது” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கீழே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார் நகைவேழம்பர். என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி தோன்ற ஊழியர்கள் அவர் முகத்தைப் பார்த்தனர். அவருடைய நாவிலிருந்து அளவில் சுருக்கமாகவும் அர்த்தத்தில் பெரிதாகவும் இரண்டே இரண்டு சொற்கள் ஒலித்தன.

“வழக்கம் போல் செய்யுங்கள்.” இதற்குப்பின் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் விரைவுடையனவாகவும், மாறுதல் உள்ளவையாகவும் இருந்தன. நகைவேழம்பர் படிகளில் இறங்கிக் கீழே வந்து தனியாக நின்று கொண்டிருந்த பெருநிதிச் செல்வருக்கு எதிரே கம்பீரமாக நடந்து கொண்டே பேசினார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/119&oldid=1149919" இலிருந்து மீள்விக்கப்பட்டது