பக்கம்:மணி பல்லவம் 2.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

421

தொலைவுக்குத் தோன்றின. நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நண்பகல் வானம் போல் இரண்டு பேருடைய முகங்களிலும் எந்த உணர்ச்சியும் அதிகமாகத் தெரியாத அமைதி நிலவியது. நேற்றிரவு இதே நாணற் புதரில் பெருநிதிச் செல்வருடைய முகம் எப்படித் தோன்றியிருக்கும் என்று நகைவேழம்பர் தமக்குள், கற்பனை செய்து பார்க்க முயன்றார்.

மேலே நடக்க வேண்டிய செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் எழுந்து நடந்தார்கள். நீலநாக மறவருடைய உதவியால் ஓவியன் தப்பிவிட்டதையும், இளங்குமரனின் சித்திரம் படைக்கலச் சாலையில் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டதையும், சுரமஞ்சரியின் மணிமாலை ஓவியனிடம் இருப்பதையும் விவரித்துச் சொல்லிக் கொண்டே நடந்தார் நகைவேழம்பர்.

“அருட்செல்வ முனிவருடைய தவச்சாலை தீக்கிரையான பின்பு இளங்குமரன் ஆதரவிழந்து போவான் என்று நினைத்தோம். இப்போதோ முன்னைவிடப் பலமான ஆதரவாக நீலநாக மறவரின் துணையில் அவன் இருக்கிறான்” என்றார் பெருநிதிச் செல்வர்.

“நீலநாக மறவர் மட்டுமில்லை. புறவீதியிலிருக்கும் அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையாரும் அவர்களையெல்லாம் விடப் பெரிய ஆதரவாக அவனுக்கு உங்கள் பெண் சுரமஞ்சரியும் வேறு இருக்கிறாள்” என்று சுரமஞ்சரியின் உள்ளம் இளங்குமரனுக்கு வசப்பட்டிருப்பதையும் நினைவூட்டினார் நகைவேழம்பர்.

அவர்கள் பேசிக்கொண்டே நெய்தலங்கனாலுக்கு அருகே வந்திருந்தனர்.

“இனிமேல் சுரமஞ்சரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று எங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/127&oldid=1149927" இலிருந்து மீள்விக்கப்பட்டது