பக்கம்:மணி பல்லவம் 2.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

439

இளங்குமரனை எதிரே பார்த்ததும் விசாகை நின்றாள் இளங்குமரனும் நின்றான். “இந்தப் பாத்திரத்தில் நிறைவதைக் கொண்டு ஏழைகளின் வயிற்றை நிறைப்பதற்காக ஊர் சுற்றப் புறப்பட்டு விட்டேன். மறுபடியும் விரைவில் நாம் சந்திப்போம். ஞான நூல்களைக் கற்கும் போது மனத்தில் எந்தக் கலக்கமும் இருக்கக் கூடாது. இரும்பில் தோன்றும் துரு வளர்ந்து பெருகி இரும்பையே அழித்துவிடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்து விடும். மந்தையில் ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணி மேய்க்கின்ற ஆயனைப்போல, நமக்குப் பயன் கொள்ளாமல் நூல்களை எண்ணிப் படிப்பதில் உறுதியில்லை. இன்றிலிருந்து உங்களுடைய ஒவ்வொரு நாளும், தெய்வ நாளாகக் கழிய வேண்டும்” என்று விசாகை கூறியபோது மனமும், மெய்யும் சிலிர்த்து அந்தப் பரிசுத்தவதியைக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன்.

தூய்மையே வடிவமாகி ஒரு மின்னல் நகர்ந்து செல்வது போல விசாகை மேலே நடந்தாள். நேற்று மாலை ஒரு பெண் தன்னுடைய மோகம் நினைந்த வார்த்தைகளால் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கினாள். இன்று காலையில் இன்னொரு பெண் தன்னுடைய ஞானம் நிறைந்த வார்த்தைகளால் என் கலக்கத்தைப் போக்கினாள் என்று நினைத்து வியந்த வண்ணமே தன் நாட்களைத் தெய்வ நாட்களாக்குவதற்காகக் கிரந்த சாலைக்குள் நுழைந்தான் இளங்குமரன். விசாகையின் வார்த்தைகள் அவனுக்குப் புதிய உறுதி அளித்திருந்தன.

அன்றைய தினத்துக்குப்பின் கால ஓட்டத்தைப் பற்றிய நினைவே அவனுக்கு இல்லை. அவன் மூழ்கிப் போன உலகத்தில் ஒரே ஒரு காலம்தான் இருந்தது. அதற்குப் பெயர் அழிவின்மை. அவன் கற்ற நூல்களில் காலத்தின் சிற்றெல்லை பற்றியும், பேரெல்லை பற்றியும் கருத்துக்கள் வந்தன. காலத்தின் மிகக் குறுகிய சிற்றெல்லைக்குக் கணிகம் என்று பெயர். காலத்தின் மிகப் பெரிய பேரெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/145&oldid=1150030" இலிருந்து மீள்விக்கப்பட்டது