பக்கம்:மணி பல்லவம் 2.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

445

வருவாரே, அந்தப் பெரியவர் வீரசோழிய வளநாடுடையார்-அவர் எப்போதோ ஒருநாள் கோபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்; அதை நான் இந்த விநாடி வரை மறக்கவில்லை. “இளங்குமரனை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து எப்போது விடுதலை செய்யப் போகிறீர்கள்?” என்று என்னை அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நான் விடை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அதாவது உன்னை இந்த ஞானச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய நேரத்துக்கு வந்தாயிற்று. விடுபட வேண்டிய தகுதி உனக்கும் வந்துவிட்டது.

“இந்த உலகத்தில் எல்லாச் சிறைகளிலிருந்தும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுவதுதான் ஞானம் என்று நான் பல்லாண்டுகளாக நினைத்தும் கற்பித்தும் உணர்ந்தும் வந்ததை ஒரே ஒரு கணத்தில் மாற்றி ஞானச் சிறை-என்று சொல்லிய தைரியத்தை அந்தக் கிழவரிடம் தான் கண்டேன் அப்பா!” என்று அடிகள் சொல்லிச் சிரித்தபோது-

“அதை அடிகள் பொறுத்தருள வேண்டும். அவர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார்” என்று இளங்குமரன் குறுக்கிட்டுக் கூறினான்.

“பொறுத்தருளாவிடில் இதுவரை இக்கேள்வி என் மனத்திலேயே தங்கியிருக்குமா? நான் பொறுத்துக் கொள்வதற்குக் கடமையும் உண்டு. என்னிடம் நீலநாகன் உன்னைப் பற்றி எப்போது முதல் முறையாகச் சொன்னானோ அப்போதிருந்து நானே உன்னைக் காண்பதற்குத் தவித்தேன் என்ற இரகசியத்தை இன்று நீ தெரிந்து கொள்வதனால் தவறில்லை. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்ய ஏற்ற விளை நிலமாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். என் போன்றவர்களுக்கு ‘அவதிஞானம்’ என்று ஒருணர்வு உண்டு. ‘முன்பின் தொடர்பின்றி இன்னதை இப்படிச் செய்தால் வெற்றிதான் கிடைக்கும்’ என நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/151&oldid=1150037" இலிருந்து மீள்விக்கப்பட்டது