பக்கம்:மணி பல்லவம் 2.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

447

கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ அதைப் பொய்யாக்கிவிடாதே என்று வற்புறுத்துவதுதான்.

இப்படி இந்தச் சொற்கள் உணர்ச்சி தோய்ந்து அவரிடமிருந்து ஒலித்தபோது முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு நிமிர்ந்து இளங்குமரன் அப்போது தான் கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனையும் அவருடைய முகத்தையும் சேர்த்துப் பார்த்தான். நாளைக்கு விடிந்தால் சித்திரா பெளர்ணமி என்பதும் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா என்பதும் அவனுக்கு நினைவு வந்தன. தான் திருநாங்கூரில் குருகுல வாசம் செய்த காலத்தில் எத்துணை இந்திர விழாக்கள் நடந்திருக்கும் என்று கழிந்த ஆண்டுகளை எண்ணியது அவன் மனம். தான் நகரத்தில் இருந்தபோது நடந்த இந்திர விழாக்களையும் நாளைக்குப் புதிய மனிதனாகப் புதிய கண் பார்வையோடு சென்று காண்பதற்கிருக்கும் இந்திர விழாவையும் இணைத்து நினைத்தான் அவன். அடிகளின் பேச்சு மீண்டும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அவருடைய சொற்களைக் கேட்கலானான்.

“இளங்குமரா! நீ எங்கிருந்தாலும் திருநாங்கூரின் இந்தப் பூம்பொழிலிலிருந்து இரண்டு கண்கள் உன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பாவனை செய்து கொண்டிரு. அந்தப் பாவனை நீ செல்லுமிடங்களில் எல்லாம் உனக்கு வெற்றியை அளிக்கும். குருகுல வாசத்தை முடித்துக் கொண்டு எண்ணற்ற மாணவர்கள் உன்னைப் போல் இங்கிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் குருவைப் பிரிந்து போவதற்காகக் கவலைப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பிரிய நேருவதற்காக சாமான்ய மனிதரைப் போலக் குரு கவலைப்பட்டதில்லை. இன்றைக்கு உன்னுடைய குருவுக்கு நீதான் அப்படிப்பட்ட கவலையைத் தருகிறாய்” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் நெகிழ்ந்து அதற்கு மேல் சொற்களே வராமல் கண்கலங்கி அவனைப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/153&oldid=1150039" இலிருந்து மீள்விக்கப்பட்டது