பக்கம்:மணி பல்லவம் 2.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

315

கப்பல் தலைவனிடம் அதையே சொல்லியபோது, நகை வேழம்பருக்கு வேண்டிய செய்தி அவனிடமிருந்து கிடைத்தது.

“ஐயா! நீங்கள் கேட்பதுபோல் ஒரு பெண்ணும் அவளுடைய அன்புக்குரிய காதலர்போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து எங்கள் கப்பலில் இடம் பெற்றுக் கரை சேர்ந்தார்கள். அந்தப் பெண் கப்பலில் வரும்போது உடன் வந்த இளைஞரிடம் பிணக்குக் கொண்டதுபோல் கோபமாக இருந்தாள். அவள் இந்த நகரத்தில் உள்ள பெரிய கப்பல் வணிகரின் பெண் என்று உடனிருந்த இளைஞர் எங்களிடம் கூறினார். அதனால் விருப்பத்தோடு எங்களுடைய கப்பலில் கொண்டு வந்த பட்டுக்களையும் மற்ற அலங்காரப் பொருள்களையும் அவளிடம் எடுத்துக் காண்பித்தோம். அவள் அவற்றில் எதுவும் தனக்குத் தேவையில்லை என்று மறுத்து விட்டாள்! நீங்கள் கூறுவதுபோல் அவளையும் அந்த இளைஞரையும் கரை சேர்த்ததற்கு அவள் பெற்றோரிடம் பரிசு எதுவும் வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. உதவி செய்வதில் இருக்கிற ஒரே பெருமை கைம்மாறு கருதாமல் உதவி செய்தோம் என்பதுதானே? பரிசு வாங்கிக் கொண்டால் அந்தப் பெருமையை நான் அடைய முடியாது” என்று சீனத்துக் கப்பல் தலைவன் நகைவேழம்பரிடம் கூறினான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அவளுடைய கப்பலில் வந்தது சுரமஞ்சரியாகத்தான் இருக்க வேண்டுமென்பது உறுதிப்பட்டது. உடன் வந்ததாகச் சொல்லப்படும் இளைஞன் இளங்குமரனாகத்தான் இருக்க முடியும் என்பதிலும் நகைவேழம்பருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை.

‘இளங்குமரன் எப்படி அங்கே அவளைச் சந்தித்தான்? கப்பலில் அவன் உடன் வந்ததைச் சுரமஞ்சரி ஏன் எல்லாரிடமும் சொல்லாமல் மறைத்தாள்’ என்ற சிந்தனையில் மூழ்கியது நகைவேழம்பர் மனம் யாரோ ஒரு படகோட்டி தன்னைக் கப்பல் கரப்புத் தீவுவரை காப்பாற்றிக் கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/21&oldid=1149311" இலிருந்து மீள்விக்கப்பட்டது