பக்கம்:மணி பல்லவம் 2.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

321

மாளிகையும், மதிப்பும், செல்வமும், சிறப்பும் உள்ளவருக்கு மகளாகப் பிறந்திருக்கிற தன்னைக் காட்டிலும் புறவீதியில் கிழத் தந்தையோடு தன் தேருக்கு முன்வந்து நின்ற அந்த வீரக்குடிப் பெண்ணே எவ்வளவோ விதத்தில் கொடுத்து வைத்தவள் என்று எண்ணும் தாழ்வுமனப்பான்மையை அப்போது சுரமஞ்சரி அடைந்தாள்.

அந்த வீரக்குடிப் பெண்ணின் தந்தை ஆதரவாக அவளோடு தெருவில் நடந்து வந்ததையும், தன் தேருக்கு முன் நின்று இளங்குமரனைப் பற்றி அறிய முயன்றதையும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி, புறவீதியின் வீரக் குடும்பங்களில் ஏதாவதொன்றில் தானும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைத்துத் தவித்தது அவள் உள்ளம். செல்வமும் செல்வாக்கும் நினைத்தபடி வாழ முடியாமற் செய்யும் தடைகளாக அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றின. ‘புறவீதியிலுள்ள ஆயிரக்கணக்கான மறவர் குடும்பங்களில் ஏதாவது ஒன்றில் யாராவதோர் அன்பு நிறைந்த தந்தைக்கு மகளாய்ப் பிறந்திருந்தால் தேரையும், பல்லக்கையும் எதிர்பாராமல் மனம் விரும்பிய வரைச் சந்திக்கக் கால்களால் நடந்தே புறப்படலாம். வான்வெளிப் பறவைபோல் தன்போக்கில் திரியலாமே!’ என்று எண்ணிய போது புறவீதியிற் சந்தித்த மறக்குலத்து நங்கை மேல் சுரமஞ்சரி சிறிது பொறாமையும் கொண்டாள். தன்னைவிட அந்தப் பெண்ணே வசதிகள் நிறைந்தவளாக அந்நிலையில் அவளுக்குத் தோன்றினாள்.

அன்று மாலை சுரமஞ்சரி மேலும் கலக்கமடையும் படியானதொரு செய்தி தோழியின் மூலம் அவளுக்குத் தெரிய வந்தது. இளங்குமரனின் ஓவியத்தைக் கொடுத்து அவன் பூம்புகாரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் எங்கே தென்பட்டாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து உடனே தன் மாளிகைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று நாலைந்து முரட்டு யவன ஊழியர்களைத் தன் தந்தையாரும் நகைவேழம்பரும் சேர்ந்து இரகசியமாக

ம-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/27&oldid=1149317" இலிருந்து மீள்விக்கப்பட்டது