பக்கம்:மணி பல்லவம் 2.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

323

தன் பழைய நாட்களைச் சற்றே நினைவு கூர்ந்தது. அந்தப் பழைய நாட்களின் நிகழ்ச்சியில் ஒன்றைத் தனியே பிரித்து இப்போதுதான் சுவடியைத் தாங்கிச் சுமந்து நிற்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அவன்.

அந்த நாளில் காவிரிப் பூம்பட்டினத்தின் அம்பலங்களிலும் பொது மன்றங்களிலும், இளைஞர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சை செய்வதற்காகத் தூக்கிப் பார்க்கும் ‘இளவட்டக்கல்’ என்னும் கனமான உருண்டைக் கற்கள் இருந்தன. இவற்றைத் தூக்க முடிகிறதா? இல்லையா என்பதைப் பொறுத்து இளைஞர்களின் தோள் வலிமையைக் கணக்கிட முடிந்தது.

பூம்புகாரின் புறநகரமாகிய மருவூர்ப் பாக்கத்தின் தெரு முனைகளிலும் நாளங்காடிச் சதுக்கத்திலும், மறக்குடி மக்கள் மிகுந்த புற வீதிகளிலும் இத்தகைய இளவட்டக் கற்கள் கிடக்கும். இவற்றைச் சுற்றி எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். பொன் திணித்தாற் போன்ற அழகிய தோள்கள் புடைக்க, நெற்றியில் குறுவியர் முத்தரும்பக் கல் தூக்கும் காளையர்களின் எழிலைக் காண்பதற்காக அந்தந்த வீதிகளின் மேன்மாடங்களில் அங்கங்கே தாமரை பூத்துத் தயங்கினாற்போல் பெண்களின் மலர்ந்த முகங்கள் தோன்றும். தன் விடலைப் பருவத்தில் நகரத்திலுள்ளவற்றிலேயே மிகவும் பெரியவை என்று கருதப்பட்ட இளவட்டக் கற்களையெல்லாம் அலட்சியமாகத் தூக்கி அருகிலிருந்தவர் முகங்களில் வியப்பை மலரச் செய்திருக்கிறான் இளங்குமரன். தீரர்களின் செயல்களைக் கண்டு வியப்படைகிற பருவத்து இளைஞர்களிடையே அவன் வியப்புகளைச் செய்து காட்டும் தீரனாக இருந்த காலம் அது!

‘வலிமை வாய்ந்த இந்தக் கைகளில் இப்போது இந்தச் சுவடி ஏன் அதிகமாகக் கனப்பதுபோல் ஒரு பாரத்தை உணர்த்துகிறது? மெல்லிய இந்தச் சுவிடியைத் தாங்கிச் சுமக்கும்போது என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? திடீரென்று நான் இளைத்துப் போய்விட்டேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/29&oldid=1149319" இலிருந்து மீள்விக்கப்பட்டது