பக்கம்:மணி பல்லவம் 2.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

மணிபல்லவம்

மிருந்து படைக்கலச் சாலையின் வாயிலை நோக்கி ஒரு தேர் விரைந்து வருவதைப் பார்த்தான் மணிமார்பன். தள்ளாடி விழுவதற்கிருந்தவன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றான். திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நீலநாகமறவரின் அந்தத் தேர் நின்றதும் அவர் கீழே இறங்கினார். மணிமார்பன் ஒடிப்போய் அவர் அருகே நின்று கைகூப்பி “ஐயா! நான் இளங்குமரனுக்கு மிகவும் வேண்டிய நண்பன். உங்களுக்கு அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு என்னை இந்தக் கொடுமைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். இவர்கள் இளங்குமரனைச் சிறை பிடித்துக் கொண்டு போவதற்காக அவனுடைய ஓவியத்தோடு அவனைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள். என்னையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று விடலாமெனத் துரத்துகிறார்கள். நல்லவேளையாகத் தெய்வமே வந்ததுபோல் நீங்கள் தேரில் வந்தீர்கள்” என்று மூச்சு இரைக்கப் பதறி நடுங்கிப் போவதை அநுதாபத் தோடு பார்த்தார் நீலநாகமறவர். அவர் அவனைக் கைப்பற்றிக் கொண்டு கூறலானார்.

“நான் உனது தெய்வம் இல்லை, தம்பீ! தெய்வம் அதோ அங்கே ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிறது. உனக்கும் எனக்கும், மிக அருகில்தான் இருக்கிறது.”

“ஆனால் நீங்கள் அதைவிட மிகவும் அருகில் இருக்கிறீர்களே ஐயா!” என்றான் ஓவியன்.

“பயப்படாதே! உன்னையும், என்னையும் போலத் தேடித் தவிப்பவர்களுக்குத் தெய்வம் எங்கிருந்தாலும் மிக அருகில்தான் இருக்கிறது. இதோ நிற்கிறார்களே இவர்களைப் போல் கருணையும், அன்பும் இல்லாத கொடியவர்களுக்காகத்தான் அது வெகு தொலைவில் இருக்கிறது” என்று சொல்லி ஓவியனைப் பின்னால் நிறுத்திவிட்டு வளைத்துக் கொண்டாற்போல் முன்புறம் நின்றிருந்த அந்த எதிரிகளை நெருங்கினார் நீலநாகமறவர்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/58&oldid=1149663" இலிருந்து மீள்விக்கப்பட்டது