பக்கம்:மணி பல்லவம் 2.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

367

வயிறுகளுக்கு அளித்து மீந்ததைத் தான் உண்ணும் தியாக வாழ்வை இவள் தொடங்கினாள். சமய வாதத்திலும், இன்னும் சில நுணுக்கமான ஞான நூல்களிலும் இவள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கருதிப் புத்ததத்தர் சமந்தகூட மலையிலிருந்து இவளை இங்கு அனுப்பியிருக்கிறார். புத்ததத்தரின் அறிமுக ஓலையோடு மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்து அடைமழை நாளில், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்ற அரும்பெரும் தத்துவ வாக்கியத்தை ஒலித்துக் கொண்டே இவள் இந்தக் கிரந்த சாலைக்குள் முதன் முதலாக அடியெடுத்து வைத்தாள். இன்று சோழ நாட்டிலே இவள் பாதங்கள் பட்ட இடமெல்லாம் ஏழை களுக்குப் பசி தீர்கிறது. நோயாளிகளுக்கு நோய் தீர்கிறது. துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது.”

“மற்றவர்கள் உங்களிடம் உங்களைப் பற்றியே புகழும்போது அதை விரும்பாத நீங்கள் இப்போது நான் எதிரே இருக்கும்போதே என்னை இப்படி மிகையாகப் புகழ்கிறீர்களே தாத்தா” என்று விசாகை குறுக்கிட்டாள்.

“இந்தப் புகழ் எல்லாம் உனக்கு அல்ல, விசாகை! நீ செய்கிற அறங்களுக்கு மட்டுமே உரியது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக உன் கண்களில் நீரைச் சுமக்கிறாயே, அந்தப் பண்புகளுக்கு உரியது...” என்று பொருத்தமான மறுமொழி அடிகளிடமிருந்து வந்தது.

“அதுதான் உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும் என்று நீங்களே தத்துவம் சொல்லியிருக்கிறீர்களே” என்று முதன் முறையாக விசாகையிடம் பேசினான் இளங்குமரன்.

“தத்துவம் என்னுடையதன்று, நியாய நூல்களிலிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் நான் கற்றது.”

“தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களை விடக் கடைப்பிடிக்கிறவர்கள்தான் பெரியவர்கள். கடைப்பிடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/73&oldid=1149688" இலிருந்து மீள்விக்கப்பட்டது