பக்கம்:மணி பல்லவம் 2.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

377

அவனை இவர்கள் சிறை செய்தாலும் நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.”

அவருடைய இந்த உறுதி மொழிகளைக் கேட்டபின் இளங்குமரனைப் பற்றிய பயத்தையும், கவலையையும் விட்டுவிட்டு, தான் எப்படி ஊர் போய்ச் சேருவதென்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மணிமார்பன். மறுநாள் பொழுது விடிகிறவரை அந்த நகரத்தில் தங்கியிருந்து மணி மாலையை விற்றுப் பொற்கழஞ்சுகளாகக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இப்போது அவனுக்கு இல்லை. போது விடிவதற்குள் பாண்டிய நாட்டுப் பயணத்தை இருளோடு இருளாகத் தொடங்கிவிட வேண்டுமென்று எண்ணினான் அவன்.

தன்னையும் தன்னிடமிருக்கும் மணிமாலையையும் சேர்த்துக் கைப்பற்றி விடுவதற்குக் கறுவிக் கொண்டு வந்த நகைவேழம்பர் நீலநாக மறவரிடம் தோற்றுப் போய்த் திரும்பியதோடு அடங்கிப் போய் இருந்து விடுவாரென்று அவனால் நினைக்க முடியவில்லை. இடை வழியில் எங்காவது மீண்டும் தன்னை அவர் மறித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவனை வாட்டியது. சில நாட்களுக்கு முன்பு வரையிலாவது பூம்புகாரின் இந்திர விழாவுக்கு மதுரையிலிருந்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரும்பியிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து போயிருக்கலாம். இப்போது எங்கே போய், யாரை வழித்துணை தேடுவது? இங்கிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரம் நினைத்தவுடன் போய்ச் சேர முடிந்த இடம் இல்லை, திருவரங்கத்தில் ஒருநாள், உறையூரில் ஒருநாள். தென்னவன் சிறுமலைத் தொடர்களைக் கடந்து திருமால் குன்றத்தில் ஒருநாள் என்று இடையிடையே ஓய்வுக்காகத் தங்கிப் பல நாட்கள் பயணம் செய்து வைகையின் வடகரையைக் காண வேண்டும்.

பயணத்தைப் பற்றிய தன் கவலையை நீலநாக மறவரிடம் வெளியிட்டான் அவன். “கவலைப்படாதே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/83&oldid=1149698" இலிருந்து மீள்விக்கப்பட்டது