பக்கம்:மணி பல்லவம் 2.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

379

திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நேரத்தில் இது போன்ற பொது வீதிகளில் பலரும் காண நடந்து சென்று பழக்கமில்லை அவருக்கு. அவருடைய வாழ்க்கைமுறை தனிப்பட்டதாக இருந்ததனால் விலகியும், ஒதுங்கியும் வாழவேண்டியிருந்தது. அவர் வீரர்களுக்குள் துறவியாகவும், துறவிகளுக்குள் வீரராகவும் விளங்கி வந்தார். எனவே ஒளி பரவி விடிவதற்குள் பொதுவீதிகளைக் கடந்து சென்று ஆல முற்றத்தை அடைந்துவிட வேண்டும் என்று வேகமாக நடந்து கொண்டிருந்தார் அவர். வானத்தில் விடிவெள்ளி மின்னிக் கொண்டிருந்தது. விடிகாலையின் அமைதியின் தூரத்தே கடற்கரையின் அலைஓசை ஒடுங்கியும், ஒடுங்காமலும் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. தென்னை ஓலைகளும், வேறு மரங்களின் இலைகளும் வைகறைக் காற்றில் சலசலவென ஒலியெழுப்பி இலக்கணத்தில் அடங்காததொரு அழகிய மொழியைப் பேசிக் கொண்டிருந்தன. கொண்டைச் சேவல்கள் வீடுகளின் மாடங்களில் ஏறி விடிவதற்கு முன்பே விடிவுக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வாயிற்புறங்களைத் தெளிப்பதற்காக வந்திருந்த பெண்களின் கைவளைகளும், காற்சிலம்புகளும், இந்த வீதியின் இருளில் கண்ணுக்குப் புலப்படாமல் கந்தர்வப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்களோ என்று நினைப்பதற்கேற்ற விதத்தில் கொஞ்சிக் கொஞ்சி ஒலித்தன.

தம்முடைய வழக்கப்படி ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் ஆலமுற்றத்துக் கடலருகில் நடந்து கொண்டிருப்பார் நீலநாக மறவர். கடற்கரையில் அலையோசையும் கரையோரத்துத் தாழம் புதரில் மடல்கள் காற்றில் மோதி அடித்துக் கொள்வதும் தவிர வேறு ஓசைகளை அவர் கேட்டதில்லை. இன்றோ நடந்து செல்லும் இடமும் சூழ்நிலையும், ஒலிகளும் வழக்கத்துக்கு மாறான புதுமை களை அவர் உணரும்படி செய்தன. நீலநாக மறவர் புற வீதியிலிருந்து எதிரே நடந்து சென்றபோது. அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/85&oldid=1149700" இலிருந்து மீள்விக்கப்பட்டது