பக்கம்:மணி பல்லவம் 2.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

மணிபல்லவம்

தந்தையார் சீறி விழுவார் என்பது அவளுக்குத் தெரியும். தாயோ சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உடனழைத்தாள்.

“நீயும் வா, சுரமஞ்சரி! உனக்கும், உன் தோழிக்கும் கூட மாலைக்கு முத்துக்கள் தேர்ந்தெடுக்கலாமே, ஏன் இப்படி மகிழ்ச்சியில்லாமல் காணப்படுகின்றாய்? என்னிடம் மனம் திறந்து சொல்லக்கூடாதா?” என்று கேட்டாள் தாயார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. களைத்துப் போயிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறேன் போலிருக்கிறது. நீங்கள் போய் முத்துக்களைப் பாருங்கள். என்னிடம் வேண்டிய முத்து மாலைகள் இருக்கின்றன. நான் உறங்கப் போகிறேன். தளர்ச்சியாயிருக்கிறது” என்று கூறித் தோழியோடு தன் மாடத்துக்குப் புறப்பட்டு விட்டாள் சுரமஞ்சரி.

மாடத்தை அடைந்து தானும், தன் தலைவியும் தனிமை பெற்றதும் வசந்தமாலை, “ஏனம்மா, நாளைக்கு மறுபடியும் நெய்தலங்கானலுக்குப் போக வேண்டுமென்றீர்களே? எதற்காக அங்கே போக வேண்டும்?” என்று கேட்டாள்.

“கடற்கரையிலேயே உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேனடி, வசந்தமாலை! தந்தையார் தேர் ஓட்டுவதற்காக நம்மோடு அனுப்பியிருந்த ஊழியன் நாம் எப்போது வாய்திறந்து பேசப்போகிறோம் என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பக்கத்திலேயே பழி கிடந்தான், அதனால் அந்தரங்கமாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. நாளைக்குக் காலையில் விடிவதற்கு முன்பே துயிலெழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நடந்தே நெய்தலங்கானலுக்குப் புறப்பட்டு விட வேண்டும். கதிரவன் உதயமாவதற்கு முன்பே, சோம குண்டம், சூரியகுண்டம், இரண்டு ஏரிகளிலும் நீராடிக் காமன் கோவிலை வலம் வந்து வணங்கிவிட்டுப் போனது தெரியாமல் மாளிகைக்குத் திரும்பிவிட வேண்டும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/96&oldid=1149711" இலிருந்து மீள்விக்கப்பட்டது