பக்கம்:மணி பல்லவம் 2.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

391

இதைக் கேட்டு வசந்தமாலை நளினமாகச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே சுரமஞ்சரியின் கண்களைப் பார்த்தாள்.

“அந்த இரண்டு ஏரிகளிலும் பொதுவாக எல்லாரும் நீராடுவதில்லையே, அம்மா! மனத்துக்குள் ஏதாவதொரு ஆசையை உருவேற்றிக் கொண்டு அது விளையவேண்டுமென்று அல்லவா அங்கு நீராடிக் காமன் கோவிலை வலம் வருவார்கள்? உங்களுக்கும், எனக்கும் இப்போது உடனே அந்த ஏரிகளில் நீராடித் தீரவேண்டிய அவசரம் ஒன்றுமில்லையே?”

“அப்படியானால் நீயும், நானும் ஆசைகளே இல்லாத மனத்தையுடையவர்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா வசந்தமாலை?”

“அதற்குச் சொல்லவில்லையம்மா. இருகாமத்திணை ஏரியில் நீராடிக் காமன் கோவிலை வலம் வருகிற ஆசை வேறு வகையைச் சேர்ந்தது. அங்கே நம்மைக் காண்கின்றவர்கள் குறும்பு பேசி நகைப்பார்கள்...”

“குறும்புப் பேச்சுக்கும் நகைப்புக்கும் பயந்து நாணுவதாயிருந்தால் எந்தப் பெண்ணும் அங்கே போகாமல் அல்லவா இருக்க வேண்டும்? பொழுது புலர்ந்தால் நகரில் உள்ள பெண்களின் கூட்டமெல்லாம் அங்கேதான் போய்க் கூடுகிறது.”

வசந்தமாலை பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே தலைவியின் மேல் பதியவிட்ட பார்வையை மீட்காமல் இருவிழிகளையும் மலர விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் பார்வை தாங்காமல் சுரமஞ்சரி நாணிக் குழைந்தாள்.

“என்னடி வசந்தமாலை? எதற்காக இப்படிப் பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை! உங்களுடைய ஆசைகளிலும், தோற்றத்திலும் புதுமைகள் பிறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன் அம்மா! நீங்கள் எவ்வளவோ மாறி விட்டீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/97&oldid=1149712" இலிருந்து மீள்விக்கப்பட்டது