பக்கம்:மணி பல்லவம் 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

மணிபல்லவம்


களுக்குத் தோன்றியபடி கல்லையும், கட்டையையும் எடுத்து எறியத் துணிந்து விட்டார்கள். தாங்கள் உயிர் பிழைத்துப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பப் போவ : தில்லை என்று அந்த மூன்று பெண்களும் உணர்வு செத்து உயிர் மட்டும் சாகாமல் மருண்டு நின்றபோது ஒரு விந்தை நிகழ்ந்ததைக் கண்டார்கள். யாரும் எதிர் பாராதவிதமாக "எல்லாவற்றையும் இந்த உடம்பில் எறியுங்கள்!” என்று இளங்குமரன் அவர்களுக்கு அருகில் வந்து முன்புறம் நின்றுகொண்டான். அவர்களை நோக்கி எறியப் பெற்றுப் பாய்ந்து வந்த சில கற்கள் அவன்மேல் விழுந்தன. அடுத்த கணம் கூட்டத்தினரும், நீலநாகரும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றார்கள். கற்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவின. -

"வேறு பூக்களை நம்பாமல் என்னையே உயிர்ப் பூவாக உங்கள் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கண்ணிர் மல்க இளங்குமரன் பாதங்களில் வீழ்ந்தாள் சுரமஞ்சரி. நீலநாகர் புயலாக மாறினார்; இடியாக இடித்தார்: "விலகிப் போ. உனக்கு அந்தப் பாதங்களை வணங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? குடலைக்குள் நாகப்பாம்பைக் கொணர்ந்தது போல உன் இதயத்தில் நீ என்னென்ன நச்சு எண்ணங்களை அடைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ?” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடி வந்து அவளை அவன் பாதங்களிலிருந்து அவர் விலக்க முயன்றபோது அவள் தானாகவே விலகுவதறக்காக நிமிர்ந்தாள். அப்படி அவள் விலக நிமிர்ந்தபோது கல்லெறிபட்டு இளங் குமரன் நெற்றியில் காயமாயிருந்த இடத்திலிருந்து இரத்தத்துளி ஒன்று சிவப்பு இரத்தின மணிபோல் உருண்டு சரிந்து நழுவி, அவளுடைய நெற்றியில் திலக மிட்டால் என உதிர்ந்தது. அவனுடைய அந்த நெற்றிக் காயத்தைத் தன் கைகளால் தானே துடைக்க வேண்டு மென்று சுரமஞ்சரியின் இதயம் தவித்தது.

"உத்தம குணமே நிறைந்து சத்திய தரிசனம் தரும் உன்னதமான மனிதர்களைக் காவியங்களில்தான் காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/74&oldid=1144424" இலிருந்து மீள்விக்கப்பட்டது