பக்கம்:மணி பல்லவம் 4.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

709

களாகச் சொல்லியிருக்கின்றனவோ அவைகளோடு மட்டும் உலகிலுள்ள பாவங்களின் எண்ணிக்கை முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. எத்தனை எத்தனையோ புதிய பாவங்கள் வளர்கின்றன. பெண்ணே ! நான் எல்லாவகைப் பாவங்களிலும் அழுந்தி நிற்கிறேன். இன்னும் விரும்பிச் செய்வதற்குப் புதிய பாவங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். அப்படித்தான் என்னால் இருக்க முடியும். ஆனால் இந்தக் குருடனைப் போல் எனக்கே பாவங்களைச் செய்கிறவனை என்னால் மன்னிக்க முடியாது. உலகில் கழுத்துவரை பாவங்களில் அழுந்திக்கொண்டு நின்றாலும் - நான்தான் பிறரை அழித்துக்கொண்டு நிற்க வேண்டும். என்னை யாரும் அழித்துவிட முயலக்கூடாது. இது என் வாழ்க்கையின் இரகசியம்.”

வெறி முற்றுவதுபோல் பேச்சு வளர வளரத் தந்தையின் முகம், கண்களில் குருதியை உமிழ்ந்து கொண்டே எதிரே வந்து நிற்கும் பேயின் முகம் போல மாறித் தெரிவதைக் கண்டு வானவல்லி அங்கிருந்து உடனே ஓடிவிட வேண்டும்போல அவ்வளவு அதிகமாக அச்சமடைந்தாள். அவர் கூறிக்கொண்டு வருகிறவைகள் எல்லாம் தனக்கு எச்சரிக்கையா, பயமுறுத்தலா, அல்லது ஆத்திரத்தில் விளைகிற வெறும் பேச்சா என்று புரிந்துகொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் அவள். இதற்கு முன்பு என்றும் அவளிடம் அவர் இப்படிப் பேசியதில்லை. இப்படித் தன்னிடம் பேசுவதில் அவருடைய பலம் தெரிகிறதா, பலவீனம் தெரிகிறதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. கேட்கிறவரைச் சிந்திக்கவிடாத விரைவுடன் வெள்ளமாகப் பாய்ந்து வருகிற முரட்டுப் பேச்சாக இருந்தது அது. பேச்சு நிற்கிற இடைவெளியாக வாய்க்கும் சில கணங்களிலும் இடியிடியென்று கொடிய பேய்ச் சிரிப்புச் சிரித்தார். அவர். தன் தாயும் தோழிகளும் அந்தப்புரப் பகுதிக்குச் சென்றபோது தானும் அவர்களோடு வெளியேறிப் போய்விடாமல் அவரோடு தங்கியது தவறு என்று இப்போதுதான் வானவல்லி உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/100&oldid=1231530" இலிருந்து மீள்விக்கப்பட்டது