பக்கம்:மணி பல்லவம் 4.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

710

மணிபல்லவம்


அவர் எவனோ ஒரு ஊழியனை வரவழைத்துச் சோறும் நீரும் கொண்டு வரச்செய்து நிலவறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே வைத்துவிட்டு மூடியபோதும் அவள் அவரருகேதான் இருந்தாள். அடுத்துச் சிறிது நாழிகைக்குப்பின் உள்ளே நிலவறையில் சோற்று மிடாவும் நீர்க்கலயமும், உடைபடுகிற, ஓசையும், தொடர்ந்து வேறு பல ஓசைகளும் கேட்டபோதும் கூட அவள் அவரோடுதான் இருந்தாள். நிலவறையிலிருந்து அந்த ஒசை மேலே ஒலி மங்கிய விதத்தில் கேட்கும் போதெல்லாம் தந்தையின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிவருவதையும் வானவல்லி கூர்ந்து கவனித்தாள். அவரைப் புரிந்துகொள்ள அவளால் முடியவில்லை. விதம் விதமாக மாறினார் அவர்.

“அடிபட்ட நாயாய் உள்ளே சிறைப்பட்டுக் கிடந்து உடம்பில் கொழுப்பு வற்றி எலும்பும் தோலுமாய்க் காய்ந்துபோய் மறுபடி இந்த நிலவறையிலிருந்து வெளியேறும்போது, இவன் நான் விடுகிற மூச்சுக் காற்றில் தடுமாறி விழ வேண்டும். மறுபடி என்னிடம் ஆத்திரப்பட்டு என்னை எதிர்ப்பதற்கு இவனிடம் ஆத்திரமோ, வலிமையோ மீதமிருக்கக் கூடாது. அப்படிக் காய வைத்தால்தான் புத்தி வரும் இந்தக் குருடனுக்கு!”

இவ்வாறு பேசிக்கொண்டே வந்த தந்தையார் தாம் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் வாயில் நிலையருகே இருந்த தமது ஊன்றுகோலைப் பார்த்து விட்டு அதை எடுப்பதற்காகக் காலைச் சாய்த்து நடந்து விரைந்ததைக் கண்டு தானே முந்திச் சென்று எடுத்து வந்து அதை அவர் கையில் கொடுத்தாள் வானவல்லி. அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவருடைய கைகள் நடுங்கின. அப்படி நடுங்குவதை அவர் மறைத்துக் கொள்ள முயன்றும் வானவல்லி கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டாள்.

“இந்த ஊன்றுகோல் ஒன்றுதான் நான் மெய்யாக நம்ப முடிந்த துணை பெண்ணே! சில சமயங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/101&oldid=1231531" இலிருந்து மீள்விக்கப்பட்டது