பக்கம்:மணி பல்லவம் 4.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

711

மனிதர்களை மட்டும் நம்பிக்கொண்டு காலூன்றி நிற்க முடிவதில்லை. முதல் வசதி மனிதர்களைப் போல் இதற்கு மனம் இல்லை. மனம் இருந்தால் இதுவும் எனக்கு எதிராக முயன்று ஏதாவது செய்து என் காலை இடறிவிட முயன்றாலும் முயலலாம்”-என்று வானவல்லியிடம் சொல்லிக்கொண்டே வேறு புறமாகத் திரும்பி அந்த ஊன்றுகோலின் பிடியை மெல்லத் திருகினார் பெருநிதிச்செல்வர். அதுதான் சமயமென்று வானவல்லி அங்கிருந்து நழுவிவிட முயன்றாள். அவள் அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவதற்குத் தவிக்கிறாள் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்துக்கொண் டிருந்ததுபோல் இரு போகலாம் என்றார் அவர். தந்தையார் ஊன்றுகோலின் கைப்பிடியை ஏதோ செய்துகொண்டு தன் பக்கம் திரும்பிப் பார்க்காமலே இப்படிக் கூறியதைக் கேட்டபோது அவருடைய கட்டளையை மீறிப் பயந்து அங்கேயே நின்றுவிடுவதா என்று சிந்தித்தபடி நின்ற இடத்திலேயே சிறிது தயங்கினாள் வானவல்லி.

அப்போது அவரே ஊன்றுகோலின் பிடியைத் திருகி அழுத்திக்கொண்டு அவள் பக்கமாகத் திரும்பினார்.

“பெண்ணே! நில், நீ போவதற்கு ஒன்றும் அவசரமில்லை. சற்று முன்பு இந்த ஊன்றுகோலைப் போல மனமும் சிந்தனையும் இல்லாத பொருள்கள் யார் காலையும் இடறிவிடாமல் ஊன்றி நின்றுகொள்ளத் துணை புரியுமென்று கூறினேனே! அதுவும் தவறான கருத்துத்தான். இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத்து துணை புரியாது காலை இடறி ஏமாற்றி விடுகின்றன. இதோ பார்!” என்று கூறி, அந்த ஊன்று கோலை வீசி எறிந்தார். அது பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று பிரிந்து விழுந்தது. அப்போது வானவல்லி சீற்றம் கொதிக்கும் அவருடைய முகத்தில் பாவங்களின் நிழலை எல்லாம் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/102&oldid=1231532" இலிருந்து மீள்விக்கப்பட்டது