பக்கம்:மணி பல்லவம் 4.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. கனவை வளர்க்கும் கண்கள்

க்கறுதல் என்ற தமிழ் வார்த்தைக்குப் பொருள் ஆசையால் தாழ்தல் என்று இளமையில் தனக்கு இலக்கியங்களைக் கற்பித்த புலவர் கூறியிருந்ததை இன்று நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. நன்றாக முற்றிக் கனிந்த முழுமையான கனியைப்போல இந்த வார்த்தையில் நிரம்பியிருக்கும் பொருளை எல்லாம் இன்று அவள் உணர்ந்தாள். ஆசைக்கு உரிய பொருள் மேலே மேலே எட்ட முடியாத உயரத்துக்கு விலகிப்போகும்போது அதன்மேல் ஆசை வைத்தவர்கள் கீழே தாழ்ந்துதான் போய்விடுகிறார்கள். முன்பு இருந்த இடத்தினின்று தணிந்து கீழே சரிவதுதான் தாழ்வு என்பதில்லை. ‘இது நமக்குக் கிடைக்க வேண்டும்’ என்று நாம் ஆசைப்படும் இலக்கு எதுவோ அது நம்மினும் மேலே உயர்ந்துவிட்டாலே நமக்குத் தாழ்வுதான் என்று தன் குறையை உணர்கிற மனநிலையோடு கையிலிருந்த ஏடுகளையெல்லாம் பட்டு நூலில் கட்டிச் சுற்றி வைத்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.

அவளுக்கு எதிரே மேற்குப் புறத்துப் பலகணியின் முன் மாடத்துக்கு அப்பால் அந்திவானம் செந்தழல் பரந்து, அதில் சிறிது சிறிதாய் மஞ்சளும் கலந்து கொண்டிருந்தது. நான்கு காத தூரம் பரந்து கிடக்கும் அந்தப் பெரிய பூம்புகார் நகரத்தில் ஒவ்வொரு மாலைப் போதும் யார் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்களை எல்லாம் உண்டாக்குகின்றனவோ! அவளைப் பொறுத்தவரை ஒரு மாறுதலும் இல்லை. அவளுடைய காலை நேரம் அந்த மாடத்தின் கிழக்குப் பக்கத்துப் பலகணியில் பிறக்கிறது. மேற்குப் பக்கத்துப் பலகணியில் முடிந்துவிடுகிறது. இவற்றுக்கு இடையே தான் அவளுடைய ஆசைகளும் அவளும், ஏங்கி ஏக்கற்றுக் கொண்டிருக்கும்படி நேர்ந்துள்ளது. காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/103&oldid=1231533" இலிருந்து மீள்விக்கப்பட்டது