பக்கம்:மணி பல்லவம் 4.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

620

மணிபல்லவம்

அமைந்திருக்கும்போல் தோன்றுகிறதே. ஒருணர்வு அழிந்து இன்னோர் உணர்வு பிறக்கின்ற காலத்து முகபாவத்தை அப்படியே சித்தரிக்க முடிந்தால் அது ஒவியத் துறையில் ஈடுபட்டிருப்பவனுக்கு மாபெரும் வெற்றி பெண்ணே இருள் அழிந்து ஒளி பிறக்கிற நேரத்தையும், ஒளி அழிந்து இருள் பிறக்கிற நேரத்தையும் இயற்கை வரைந்து காட்டுகிறாற்போல் முழுமையாய் வரைந்து காட்டுகிற ஓவியனோ, கவிஞனோ உலகத்தில் இதுவரை ஏற்படவில்லை!”

“இந்தக் கலைஞர்களே இப்படித்தான். பிறருடைய துக்கத்திலிருந்து தேடி தங்கள் கலையைப் பிறப்பிக்கிறார்கள். அவர் தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் புறக்கணித்தது போலப் போகிறாரே என்று அந்தப் பெண் முல்லை துயரக் கோலத்தில் நின்றாள் என்று சொன்னால், அந்தக் கோலம் சித்திரத்திற்கு நன்றாக இருக்குமே என்று வாய் கூசாமல் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே? இப்போது நீங்கள் கூறியதை அந்தப் பெண்ணின் தந்தை கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்!”

“பெண்ணே! இப்படி நினைப்பதாயிருந்தால் நீ என்னைப்போல் ஒரு கலைஞனுக்கு மனைவியாக வாய்த்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கலைஞனுடைய மனமும் பேசாத யாழ். பிறருடைய துன்பங்களாகிய இளைத்த கைகளின் மெலிந்த விரல்கள் அந்த யாழை வருடும்போதுதான் அது பேசுகிறது. அதில் கலைப் பண்கள் பிறக்கின்றன. திருமாலும், திருமகளும், இராமனும், சீதையுமாக மண்ணில் பிறந்து மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களின் துன்பத்தை மனிதர்களுக்கே உரிய குறைந்த பலத்தோடு தாங்கியிராவிட்டால் எந்தக் கவியின் கையாவது இராமாயணம் எழுதத் துடித்திருக்குமா பெண்ணே ?

“சிறிது காலமாக உங்கள் நண்பரோடு இருந்து அவர் பேசிய பேச்சுக்களையும், புரிந்த சமய வாதங்களையும் கேட்டாலும் கேட்டீர்கள் - இப்போது நீங்களே அவரைப்போலப் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/11&oldid=1231441" இலிருந்து மீள்விக்கப்பட்டது