பக்கம்:மணி பல்லவம் 4.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

728

மணிபல்லவம்

யும் செய்வதற்குப் பொறுமை இல்லை அவருக்கு. பட்டினப்பாக்கத்தில் வானளாவ நிமிர்ந்து நிற்கும் தன்னுடைய அந்த மாளிகை ஒவ்வோரடுக்காகச் சரிவது போல் அவருடைய மனக்கண்ணில் அழிவைக் குறிக்கிற பொய்த் தோற்றங்கள் வரிசையாய்த் தோன்றின.

அன்று மாலை இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் அனுப்பியிருந்த காவலன் நாகர் குலத்து அருவாள மறவனோடு திரும்பி வந்துவிட்டான். இறைச்சி மலையாக வளர்ந்திருந்த அந்த முரட்டு நாகன் பெருநிதிச் செல்வருடைய அந்தரங்க அறையில் நுழைந்து அவரை வணங்கிவிட்டுப் பணிவாக எதிரே நின்றான். அவனை அழைத்து வந்த காவலனை அங்கிருந்து வெளியே போய்விடுமாறு குறிப்புக் காட்டினார் பெருநிதிச் செல்வர். காவலன் வெளியேறியதும் மாச பர்வதமாக வந்து நின்ற அருவாளனை நெருங்கி மெல்லிய குரலில் அவனை வேண்டிக்கொண்டார் அவர்.

“அருவாளா! நீண்ட நாட்களுக்கு முன்னால் ஓர் இந்திர விழாவில் நானும் நகைவேழம்பரும் உன்னை ஒரு காரியத்துக்குத் தூண்டிவிட்டு அனுப்பினோம். சம்பாபதி வனத்து இருளில் அந்த முனிவரையும் அவருடைய வளர்ப்புப் பிள்ளையையும் எமனுலகுக்கு அனுப்பிவிடச் சொல்லி நாங்கள் உன்னை அனுப்பிய காரியம் அன்று உன்னால் நடைபெறவில்லை. இருந்தும் இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு உன்னை நான் மீண்டும் இங்கே அழைத்திருக்கிறேன். இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லி வேண்டிக்கொள்ளப் போகிற செயல் உன் நிலையில் உனக்கு மிகவும் சிறியது தான். ஆனால் என் நினைப்பில் அது மிகவும் பெரியது, அவசியமானது. அவசரமானது. அதை நீ செய்வதற்கு மறுக்கக்கூடாது.”

அருவாளன் தன்னுடைய பயங்கரமான உருட்டு விழிகளால் விழித்து அவரைப் பார்த்துவிட்டுச் சிறிது நேரம் தயங்கியபின் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து மறுமொழி கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/119&oldid=1231546" இலிருந்து மீள்விக்கப்பட்டது