பக்கம்:மணி பல்லவம் 4.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

736

மணிபல்லவம்

ஆனால் சுருக்கமாக உனக்கு ஒன்று சொல்ல முடியும். இன்று உன் தந்தையின் எல்லா நினைவுகளும் எவை எவற்றை எண்ணிக் கவலையும் குழப்பமும் அடை கின்றனவோ அவற்றையெல்லாம் அப்படி உயிர்த்து எழச் செய்தவள் நீதான் என்பதைப் படிப்படியாகக் காரண காரியங்களோடு உன்னிடம் விளக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய எனக்கு இன்று நேரமில்லை. இப்படிப் பெற்று வளர்த்துப் பேணி உனக்கு நான் தந்த வாழ்வு என்னுடைய சாவுக்கு நானே இட்டிருக்கிற வித்தோ என்று நினைத்துக் கொண்டு பயப்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது” என்று வாயிலுக்கு அப்பால் ஒரு காலும் இப்பால் ஒரு காலுமாகப் போகிற போக்கிலே பேசுவதுபோல் அவர் பேசிவிட்டுப் போன வார்த்தைகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தீர்த்துக் கொண்டு தெளிவு பெற விரும்பிய குழப்பங்களைப் போலப் பலமடங்கு புதிய குழப்பங்களை அவர்களுக்கு இப்போது அளித்துவிட்டன.

அந்த ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்த நிகழ்ச்சியையே ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாக்கி விடுகிறவரைப்போல் அதற்குச் சில கணங்கள் இடைவெளியளித்து அதை மிகவும் அலட்சியம் செய்து தாங்களும் அதைச் சாதாரணமாகக் கருதத் தொடங்கி விட்ட நேரத்தில், ‘உனக்கு நான் தந்திருக்கிற வாழ்வால் எனக்கு நீ தரப் போவது சாவுதான்’ என்று துணிந்து அவர்களிடம் புதிர் போட்டுவிட்டுப் போயிருந்தார் அவர்.

அங்கிருந்து அவர் தலை மறைந்ததும், “பத்துப் பன்னிரண்டு பேரரசர்களுக்குச் சூழ்ச்சிகளைக் கற்பித்துச் சொல்லிக் கொடுக்கும் ஒரே ஓர் அமைச்சராக இருக்கிற அளவு அற்புதமான சூழ்ச்சிகளைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் உங்கள் தந்தையாயிருக்கிறார் என்பதற்காக நீங்களும் பெருமைப் படலாமே அம்மா” என்று சுரமஞ்சரியிடம் மெல்லச் சொல்லி சிரித்தாள் வசந்தமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/127&oldid=1231555" இலிருந்து மீள்விக்கப்பட்டது