பக்கம்:மணி பல்லவம் 4.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதை எதை நான் மறைத்துப் பாதுகாத்தேனோ அவற்றை நானே வெளிப்படுத்தி விடுவேனோ என்று அவர் நம்பிக்கை இழந்த காலத்தில் நான் இப்படி அழிக்கப்பட்டுவிட்டேன். பிறருக்குப் பயன்பட்டு அழிகிற எல்லாரும் கடைசியில் இப்படிக் கதவுகளைப் போலத்தான் ஆகிறார்கள். போகட்டும் உடைந்த கதவினால் பயனும் பாதுகாப்பும் இருக்க முடியாதுதான். உன்னிடமிருந்து எனக்குச் சில செய்திகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் மிக உயர்ந்த இடத்திலிந்து உருண்டு விழுந்து விட்டேன் அருவாளா! அந்தப் பெருமாளிகையின் நிலவறையிலேயே நான் இறந்துபோய் விடுவேனோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய சாவு கூட அந்த மாளிகையின் எல்லைக்குள்ளே நடக்ககூடாது என்று பெருநிதிச்செல்வர் கருதி விட்டாற்போல் இருக்கிறது...” என்று நலிந்த குரலில் நகைவேழம்பர் கூறிக்கொண்டு வந்த அவருடைய சொற்களால் மனம் மாறியிருந்த அருவாளன் அவர் மேல் சிறிது இரக்கமும் கொள்ளத் தொடங்கியிருந்தான். ‘பிறரைக் காப்பதற்குப் பயன்பட்டுப் பின்பு தன்னையே காத்துக்கொள்ள முடியாமல் அழிந்து போகிற எல்லாருடைய கதையும் என் நிலையில்தான் இருக்கும் என்று அவர் கூறியிருந்த வாக்கியம் அவன் மனத்தில் இனம் புரியாததோர் ஊமைக் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அந்தக் கிளர்ச்சியினால் அவரிடமே சிறிது தைரியமாகப் பேசினான் அவன்.

“ஐயா! நாம் பிறருக்குப் பயன்படலாம். ஆனால் நமக்கும் ஓரளவு பயன்படுகிறவராகப் பார்த்துத்தான் நாம் பயன்படவேண்டும். நீங்கள் அந்த மாளிகையின் எல்லையில் இருந்தாலே உங்கள் உயிர் பேயாகி அங்கே உலாவும்; அப்படி உலாவுவதுகூடக் கெடுதல் என்று எண்ணிப் பயந்து ஒதுங்குகிறவருக்குப் போய்ப் பயன் பட்டு வீணாகிவிட்டீர்கள் நீங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/142&oldid=1231567" இலிருந்து மீள்விக்கப்பட்டது