பக்கம்:மணி பல்லவம் 4.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

761

பகல் பிறந்துகொண்டிருந்தது. விடிய விடியத் தங்களை எதிர்பார்த்து விழித்திருந்த சோர்வைப் பெருநிதிச் செல்வரின் முகத்திலும் சிவந்து போயிருந்த விழிகளிலும் அவர்கள் கண்டார்கள். அப்போதிருந்த மனநிலையில் அருவாளனுக்கு அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்க வில்லை.

போன காரியம் என்ன ஆயிற்று? என்பதைக் கண் பார்வையில் குறிப்பாலேயே அவர்களிடம் வினவினார் பெருநிதிச் செல்வர். வார்த்தைகளை செலவழிக்காமலே பிறந்த குறிப்புக் கேள்வியாயிருந்தது.

“உங்கள் கவலை தீர்ந்துவிட்டது” என்று அவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவன் போலத் தரையைப் பார்த்துக்கொண்டே மறுமொழி கூறினான் அருவாளன். அப்போது அவனுடைய சோர்வையும் தளர்ச்சியையும் உற்சாகமின்மையையும் அவரே கண்டு புரிந்துகொண்டு விட்டார்.

“நீயும் உன் தோழனும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படியே காரியத்தை முடித்துக் கொண்டுதான் வெற்றியோடு திரும்ப வந்திருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் இருவர் முகங்களிலும் நான் உற்சாகத் தையோ பெருமையையோ காண முடியவில்லையே? அது ஏன் ?”

சிறிது தயங்கியபின் அருவாளன் அவருடைய இந்தக் கேள்விக்கு விடை கூறினான்:

“ஐயா! சில காரியங்களைச் செய்தபின் அப்படிச் செய்ததற்காக எந்தவிதத்திலும் பெருமிதப்பட முடிவதில்லை. மேலும் அந்த மனிதருடைய சாவு இயல்பாகவே நேர்ந்துவிட்டது. நாங்கள் ஏதும் செய்வதற்கு முயலு முன்பே அவர் தாமாகவே அழிந்து போய்விட்டார்.” என்று தொடங்கிக் காளிகோட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னான். அப்படிச் சொல்லிய போது நகைவேழம்பருடைய கடைசி ஆசையையும் அதற்காகத் தாங்களே வன்னி மன்றத்துக்குப் போய்ப் பைரவியை அவரிடத்திற்கு அழைத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/152&oldid=1231576" இலிருந்து மீள்விக்கப்பட்டது