பக்கம்:மணி பல்லவம் 4.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

764

மணிபல்லவம்

ருந்த தன் கணவனருகே சென்றாள். அவளுடைய கை வளைகளும் கால் சிலம்புகளும் கப்பலின் ஆட்டத்தில் நளினமாய் ஒலித்தன. கிழக்கு வானத்தில் இளஞ்சிவப்பும், கடல் நீரின் நீல நிறமும் வண்ணச் சித்திரங்களாய் ஒன்றுபட்டுக் கலக்கும் அழகில் ஈடுபட்டிருந்த மணிமார்பன் தனக்குப் பின்னால் வளையொலியும், சிலம்பொலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கக் கேட்டுத் திரும்பினான். பதுமை வந்துகொண்டிருந்தாள். கிழக்கே சூரியன் உதயமாவதைப் பார்ப்பதற்காகச் சந்திரன் உதயமாகி எழுந்து வருவதைப் போலவும் பதுமையின் முகம் அப்போது மிகவும் அழகாயிருந்தது. தன்னுடைய கற்பனையைத் தன் மனைவி பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன்.

“இங்கே கதிரவன் உதயமாகும் அழகைப் பார்க்கலாம் என்று நான் எழுந்து வந்து நின்றேன். பதுமை இப்போது பின் பக்கம் திரும்பிப் பார்த்தால் குளிர் நிலவு பொழியும் கதிர்களோடு சந்திரன் உதயமா யிருக்கிறான்! இது என்ன அதிசயமோ !”

அவன் கூறியது புரியாமல், “எங்கே ? எங்கே ?” என்று கேட்டு நாற்புறமும் நோக்கி மருண்டாள் பதுமை.

“எங்கேயா? இதோ.. இங்கே!” என்று தன் அருகே வந்து நின்ற அவள் முகத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லிச் சிரித்தான் மணிமார்பன். பதுமை நாணத்தோடு அந்தப் பேச்சை உடனே வேறு கருத்துக்கு மாற்றினாள்.

“இரண்டு மூன்று நாட்களாக எனக்கு நல்ல உறக்கமே இல்லை. உறக்கத்தில்கூட அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கெட்ட சொப்பனங்கள்தான் காண்கின்றன. அன்றைக்குக் கற்பூர மரக்கலத்தில் தீப்பற்றிய பின் கட்டையைப் பற்றிக்கொண்டு அவர் மிதந்தபோது அவரைப் பார்த்ததனால் வந்த வினை இது. நேற்றிரவு மட்டும் அவரைப் பற்றிய கனவில் ஒரு மாறுதல் எற்பட்டது. அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/155&oldid=1231581" இலிருந்து மீள்விக்கப்பட்டது