பக்கம்:மணி பல்லவம் 4.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

769

யிருக்கின்றன. ஆனால் நான் இந்த உலக வாழ்க்கையில் உன்னைவிட மூத்தவன். அதிக அநுபவங்களை உடையவன். நீ உடல் வலிமையைப் பயன்படுத்திப் போரிட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உன் வாழ்வில் வரலாமென்றே எனக்குத் தோன்றுகிறது.”

இதைக் கேட்டு இளங்குமரன் மறுமொழி கூறாமல் சிரித்தான். அவனுடைய இந்தச் சிரிப்பினால் வளநாடுடையாரின் நெஞ்சில் ஆத்திரம் பொங்குவதை அவருடைய முகமும் கண்களும் காட்டின. மறுபடி அவர் அவனிடம் பேசிய சொற்களிலும் ஆத்திரம்தான் தொனித்தது.

“எனக்கென்ன வந்தது? இந்தத் தள்ளாத வயதில் இப்படியெல்லாம் கடலிலும், கப்பலிலும் உன்னை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு நான் அலைவதை நீயே விரும்பவில்லையானால் இந்தக் கணமே என் முயற்சிகளை நான் கைவிட்டு விடலாம். ஆனால் இப்படிச் செய்வதாக வேறொருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டதன் காரணமாக இதை நான் செய்தாக வேண்டியிருக்கிறது. நீயோ என் வார்த்தைகளைச் செவியேற்றுக் கொள்ளாமலே என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.”

கேட்கிறவர் பரிதாபம் கொள்ளத்தக்க சொற்களில் அவர் இப்படிக் கூறியபோது இதைக் கேட்ட இளங்குமரனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. காரணமின்றி அந்த முதியவருடைய மனத்தைப் புண்படுத்தும் சொற்களைத் தான் பேசி விடலாகாது என்று எண்ணிக் கொண்டே பரிவுடன் அவரருகிற் சென்று மறுமொழி கூறினான் அவன்:-

“உங்களோடு பயணம் புறப்பட்டு வந்ததற்காகவோ, அலைவதற்காகவோ நான் வருந்துவதாக நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது ஐயா! வலிமை என்று நீங்கள் கூறினீர்களே, அதைப்பற்றி மட்டும்தான் நான் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு சிரித்தேன். கொன்று குவிப்பதையும் பிறரை அழித்தொழிப்பதையும்தான் வலிமை என்று நீங்கள் கருதிப் பேசிய

ம-49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/160&oldid=1231586" இலிருந்து மீள்விக்கப்பட்டது