பக்கம்:மணி பல்லவம் 4.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

770

மணிபல்லவம்

தாகத் தோன்றியது. நான் அவற்றை வலிமையாகக் கருதாததனால் தான் சிரித்தேன். தன் காலடியில் அடைக்கலம் என்று வந்து விழுந்த புறாவைத் துரத்திக் கொண்டு தொடர்ந்த வேடனைத் தன் உடல் வலிமையாலும் ஆட்சியின் படை வலிமையாலும்தானே ஓட ஓட விரட்ட முடியும் என்று தெரிந்திருந்தும், அந்த வேடன் அப்போது எதைத் தன்னுரிமையாக முன் நிறுத்தி வாதிட்டானோ அந்தக் கருத்தின் வலிமையை மறுக்க முடியாமல் உடம்பிலிருந்து சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வலிமை மெய்யான வீரம் அல்லவா? போரிடுவதும், எதிர்ப்பதும், அழிப்பதும்தான் மனிதனுடைய வலிமை என்று சொல்லிப் புகழுவீர்களானால் பிறருக்காக உயிரையும் உடம்பை யும் அழித்துக் கொள்வதற்குக் கூடத் துணிகிற சிபி போன்றவர்களை இன்னும் அதிகமான ஆற்றலுள்ள வார்த்தையால் அல்லவா புகழ வேண்டும்? நான் அதை எண்ணித்தான் சிரித்தேன்...”

“சிரிப்பாய் தம்பீ! சிரிப்பாய், நீ ஏன் சிரிக்க மாட்டாய்? இப்படிப் பேசுவதைத் தவிர வேறெதையும் திருநாங்கூரில் போய் நீ கற்றுக்கொண்டு வரவில்லை போலிருக்கிறது? நல்ல பிள்ளையாயிருந்து என் சொற்படி கேட்டு இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னால் உன்னை நான் திருநாங்கூரில் வந்து முதல் முறை அழைத்தபோதே என்னோடு இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கையில் இதற்குள் எவ்வளவோ நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்”--

“என்னென்ன நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அவையெல்லாம் என் வாழ்வில் இப்போதே நிறைந்த அளவில் ஏற்பட்டு விட்டன ஐயா! என் மனம் நிறைய எல்லையற்ற கருணை எப்போதும் பெருகி நிற்கும்படி நான் வாழ வேண்டும். அந்தக் கருணைதான் வீரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அறிவின் முடிந்த பயன் எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/161&oldid=1231587" இலிருந்து மீள்விக்கப்பட்டது