பக்கம்:மணி பல்லவம் 4.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

772

மணிபல்லவம்

மிக அருகிலுள்ள மணிநாகபுரத்தில் சில நாழிகை தங்குவது புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்பவர்கள் எல்லாரும் அனுசரிக்க வேண்டிய வழக்கம் ஆகும்.

[1]மணிநாகபுரம் நாகநாட்டுத் தலைநகர். அது இரத்தினங்களும் முத்துக்களும், மணிகளும் நிறைந்து செல்வ வளம் கொழிக்கும் நகரம். நாகர்கள் வழிபாடு செய்யும் இரத்தின மயமான நாகதெய்வக் கோட்டம் ஒன்றும் அந்த நகரத்தின் நடுவே உண்டு. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய மணிபீடமாக அதைச் சொல்லுவார்கள். மணிநாகபுரத்தின் மேற்குக் கரை மிகவும் அழகானது. கரைநெடுகிலும் வேலியிட்டாற் போல் சங்குகளும், பவழக் கொடிகளும் ஒதுக்கப்பட்டுக் கிடப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருப்பதை நீங்களே காண்பீர்கள். சங்குவேலி என்று அந்தத் துறைக்குப் பெயர் வாய்த்த காரணமே இதுதான். இங்குள்ள ஆரவாரமான கடல் நிலையும் அலைகளின் மிகுதியும்தான் அந்தக் கரையில் வேலியிட்டாற் போலச் சங்குகள் ஒதுங்கக் காரணம் என்று சொல்லுகிறார்கள். சங்குவேலியிலிருந்து பிற்பகலில் புறப்பட்டால் அதே கரையை ஒட்டினாற்போல நாலைந்து நாழிகைப் பயணத்துக்குள் மணிபல்லவத் தீவை அடைந்து விடலாம். பெருந்தீவகத்திலிருந்து சற்றே பிரிந்து கடலில் மிதக்கும் அழகிய பசுந்தளிர்போல் மணிபல்லவத்தீவு தெரியும். நாளைக்குப் பொழுது புலர்ந்ததும் புத்த பூர்ணிமையாயிருப்பதால் இன்று மாலை நாம் போய்ச் சேரும்போது அந்தத் தீவு கோலாகலமாயிருக்கும்” என்று அந்த இடத்தின் அழகுகளைத் தான் சொல்லி வருணித்துக் கொண்டிருந்த திறமையால், மரக்கலம் அப்போது கடந்து சென்று கொண்டிருந்த ஏழாற்றுப் பிரிவின் பயங்கரத்தில் அவர்கள் கவனம் செல்லாமல் காத்தான் கப்பல் தலைவன்.


  1. ஆதாரம்: யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாண வைபவ விமரிசனம், மகாவமிசம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/163&oldid=1207659" இலிருந்து மீள்விக்கப்பட்டது