பக்கம்:மணி பல்லவம் 4.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

781

தந்தையாகவும் நினைத்துக்கொண்டு மன அமைதி அடைந்துவிட்டேன்” என்று இளங்குமரன் கூறினான்.

இதற்குள் கப்பலை நங்கூரம் பாய்ச்சியிருந்தார்கள். படகுகளில் இறங்கிக் கரையை அடைய வேண்டுமென்றான் தலைவன். மற்றவர்களையெல்லாம் வேறு படகுகளில் அனுப்பிவிட்டு இளங்குமரனை மட்டும் தனியாக ஒரு படகில் அமரச் செய்து கரைக்கு அழைத்துக் கொண்டு போனார் வளநாடுடையார். படகில் போகும்போது இளங்குமரன் ஆவலோடு எதிர்பார்த்த வேறு ஒரு சந்திப்பும் அவனுக்குக் கரையிலிருந்து கிடைத்துவிட்டது. கரையில் வரைவரை யாய்க் குவிந்திருந்த சங்குக் குவியல்களுக்கு அப்பால் விசாகையும் கூட்டத்தினிடையே நின்றிருப்பதை அவன் பார்த்துவிட்டான்.

நாக நாட்டுப் பெருந்தீவுக்கு முதல் முனையாகிய மணிநாகபுரத்துத் துறையில் இளங்குமரன் இறங்கி நின்றபோது சிறிது தொலைவில் நின்ற விசாகை அவனருகே வந்து நலம் விசாரித்தாள். அவன் மணிநாகபுரத்து மண்ணில் நின்ற வேளை அவனுடைய வாழ்வில் மிக நல்ல வேளை என்று அவனிடம் அந்தக் கடலே குறிப்பாய் சொல்வதுபோல் புரண்டு வந்த அலையொன்று நாலைந்து பொன்னிறச் சங்குகளை அவன் பாதங்களில் கொணர்ந்து இடுவதென ஒதுக்கியது.

“தம்பீ! இந்த மண்ணில் இறங்கியபின் இழந்துவிட்ட நம்பிக்கைகளையெல்லாம் நீ அடையப் போகிறாய். மணி பீடகமும், புத்த பீடிகையும், பழம் பிறவி ஞானத்தைத் தரும் என்கிறார்கள். உனக்கோ இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது” என்று வளநாடுடையார் அவன் காதருகே வந்து ஆவலோடு கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/172&oldid=1231598" இலிருந்து மீள்விக்கப்பட்டது