பக்கம்:மணி பல்லவம் 4.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

667

எதிரியாகவாவது அடைந்திருக்கலாம். ஆயிரம் குரூரமான நட்பையும், அழகில்லாத உறவையும் பெறுவதைவிட ஓர் அழகிய எதிரி கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமென்று நினைக்கிறேனடி வசந்தமாலை! உனக்கு என்ன தோன்றுகிறது ?”

“இப்போது நீங்கள் சொல்வது நியாயம் என்று மட்டும் தோன்றுகிறது.”

“மெய்யாகத்தான் சொல்கிறாயா, வசந்தமாலை! நான் பித்துக் கொண்டு விட்டேனோ என்று என் மேல் சந்தேகப்பட்டு என் பேச்சுக்கு மாறுபடாமல் என்னோடு ஒத்துப் பாடுகிறாயா?”

“இல்லை! இல்லை! மெய்யாகவேதான் சொல்லுகிறேன் அம்மா !”

தலைவியிடம் பதில் பேசிக்கொண்டே முன்புறம் வந்து கீழே வீதியைத் தற்செயலாகப் பார்த்த வசந்த மாலை அங்கே அந்த வழியாக அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த இருவரைச் சுட்டிக் காட்டி. “அதோ பாருங்கள்” என்று தலைவியிடம் கூறினாள். சுரமஞ்சரி முன்னால் வந்து அவர்களைப் பார்த்ததும் வியந்தாள்.

8. ஆரம் அளித்த சிந்தனைகள்

தெருவில் வசந்தமாலை சுட்டிக் காட்டியவர்களைப் பார்த்ததும் சுரமஞ்சரி சற்றே வியப்பு அடைந்தாள். “முன்பு ஒரு சமயம் புறவீதியில் நம் தேரை வழி மறித்துக் கொண்டு நின்று இளங்குமரனைப் பற்றிக் கேள்வி கேட்டாளே, அந்த மறக்குடிப் பெண்ணான அவள். உடன் போகிறவன் அவளுடைய அண்ணனாக இருப்பான் போல் தெரிகிறது” என்று வசந்தமாலைக்குப் பதில் கூறிக்கொண்டே அவளைத் தன்னருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/58&oldid=1231485" இலிருந்து மீள்விக்கப்பட்டது