பக்கம்:மணி பல்லவம் 4.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

683


‘வில்லில் நாணேற்றி வேகமாகத் தொடுக்கப்பட்டுச் செல்கிற அம்பின் நிழலைப் போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் வேகமாக உண்டாக்கிய சுவடு தெரிவதற்கு முன்பே அழிந்து கொண்டிருக்கின்றனவே!’ என்ற கருத்துள்ள பகுதியை இரண்டாம் முறையாகப் படிக்கும்போது சுரமஞ்சரிக்குக் கண் கலங்கிவிட்டது. இதை இப்படியே அவரிடம் யாராவது போய்ச் சொல்லமாட்டார்களா? இதையும் சொல்லி, என் துக்கத்தையும் விவரித்து அவரை என் மேல் அநுதாபமும் கொள்ளச் செய்யும் திறமை வாய்ந்த தோழிகள் யாருமே எனக்கு இல்லையா? என்று எண்ணி எண்ணி அந்தப் பகுதிக்கு மேல் பாடலில் மனம் செல்லாமல் இளங்குமரனுடைய முகத்தை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி.

மூன்றாவது முறையாக இதே பகுதியைத் தன் தோழி வசந்தமாலைக்கும் படித்துக் கூறிவிட்டு, “இப்படித் திறமையாக அவரிடம் பேசி என் உணர்ச்சிகளையெல்லாம் அழகான உவமானத்தினால் விளக்குவதற்கு உன்னைப் போல் ஒரு தோழியால் முடியுமோ? வசந்த மாலை!” என்று ஏக்கத்தோடு அவளைக் கேட்டாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று அறியாமல் திகைத்தாள்; சுரமஞ்சரி அவளுடைய திகைப்பைப் பார்த்துவிட்டு, “நான் சொல்லியதே உனக்குப் புரியவில்லை போலிருக்கிறதே வசந்தமாலை!” என்று தன் தோழியைக் கேட்டாள்.

“புரிகிறது அம்மா! ஆனால் உங்கள் துன்பத்தை அவரிடம் திறமையாக எடுத்துச் சொல்வதற்காகவாவது நான் ஒரு கவியாகப் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் துன்பங்களையும் தப்புக்களையும் ஏக்கங்களையும்கூட அழகாகச் சொல்லுகிற திறமை கவிகளுக்கு மட்டும்தான் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த பிறவியிலாவது உங்களுக்குத் தோழியாகப் பிறந்து கவியாகவும் விளங்கி நீங்கள் அன்பு செலுத்துகிறவரிடம் போய் உங்களுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/74&oldid=1231502" இலிருந்து மீள்விக்கப்பட்டது