பக்கம்:மணி பல்லவம் 5.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

886

மணிபல்லவம்

அருட்செல்வ முனிவரையும் பலமுறை கொன்றுவிட முயன்றீர்கள். இப்போது இன்று இந்த நிலையிலும் என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்துகிறீர்கள். என் குலத்து முன்னோர்களைக் கொன்றாற் போலவே என்னையும்கூட உங்களால் கொன்றுவிட முடியும். ஆனால் ‘நாம் இன்னாரைக் கொன்றோம் என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனச்சாட்சியின் ஞாபகக் குரல் இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்குமே, அந்த ஒலியை உங்களால் ஒருபோதும் கொல்ல முடியாதே?...”

இவற்றைக் கேட்டுப் பெருநிதிச் செல்வரின் உடல் நடுங்கியது. உடம்பு முழுவதும் பாதாதி கேசபரியந்தம் தீப்பற்றி எரிவதுபோல் வெம்மைப்பட்டு வேர்த்தது. எதிரே வந்து நின்றுகொண்டு நியாயத்தைப் பேசுகிறவனுடைய சொற்களே ஒவ்வொன்றாகப் புறப்பட்டுப் பாய்ந்து துளைக்கும் அம்புகளாக வந்து தாக்கித் தன்னை வீழ்த்தி விட்டாற்போல ஒரு கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டு தளர்ந்து போய்ப் பின்னால் சிறிது சிறிதாக நகர்ந்து கட்டிலில் அமர்ந்தார் அவர். அமர்ந்தபடியே மற்றொரு கையிலிருந்த ஊன்றுகோலை நெஞ்சருகே கொண்டுபோய் இரண்டு கைகளும் நடுங்கிடப் பிடியைத் திருகி அந்த ஐம்படைத் தாலியை எடுத்து இளங்குமரனுக்கு முன்னால் வீசி எறிந்தார்.

தரையில் மின்னல் விழுந்து நெளிவதைப் போலத் தனக்கு முன் வீழ்ந்து கிடந்த அந்தப் பொருளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் நின்றபோது அதை அவனுக்கு முன் வீசி எறிந்ததைவிட வேகமாகத் தன்னுடைய சொற்களை வீசி எறிவதுபோல் குமுறிக் குமுறிப் பேசலானார் அவர்:-

“உன்னுடைய தாய்மாமனிடமிருந்து நான் கொள்ளையடித்து விட்டதாக நீ சொல்லிக் குறைபட்டுக் கொள்கிற பொருளை இதோ உன் காலடியில் தூக்கி எறிந்து விட்டேன். இதை எடுத்துக் கொண்டு போய்விடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/104&oldid=1231833" இலிருந்து மீள்விக்கப்பட்டது