பக்கம்:மணி பல்லவம் 5.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

889

அந்தத் தோற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கொண்டு கீழே குனிந்து தரையைப் பார்த்தார் அவர் .

“தம்பீ! இந்த மனிதனிடம் வாயினால் பேசி நியாயம் கேட்டுப் பயனில்லை. கைகளால் பேச வேண்டும். எவ்வளவு பாவங்களைச் செய்யக் கூடாதோ அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு மேலும் செய்வதற்குப் பாவங்களைப் தேடிக் கொண்டிருக்கிறவன் இவன்” என்று சொல்லிக் கொண்டே தனக்கு அருகில் வந்த நீலநாகரை இளங்குமரன் அவ்வளவாக மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. உள்ளடங்கிய மெளனத்தோடு சில விநாடிகள் அசையாது நின்றபின், ஒரு காலத்தில் தனக்கு வீரத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த அந்தப் பெருவீரரை நோக்கி இளங்குமரன் இப்போது ஒரு கேள்வி கேட்டான்.

“ஐயா! யாருடைய துணையுமில்லாமல் நம்முடைய பகையை நாமே தனியாக எதிர்கொள்ளலாம் என்று திடமான எண்ணத்தோடு புறப்பட்டு வந்திருக்கிற வீரனுடைய பெருமிதம் உயர்ந்ததா, இல்லையா?”

“உயர்ந்தது மட்டுமில்லை, இணையில்லாமல் உயர்ந்தது! அப்படிப்பட்ட வீரமுள்ளவர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்துள்ள வீரம் என்னும் குணத்தையே பெருமைப்படுத்துகிறார்கள், இளங்குமரா!”

“மிகவும் நல்லது ஐயா! அத்தகைய தன்னம்பிக்கை வாய்ந்த வீரன் தன் எதிரியைத் தான் மட்டும் சந்திக்க வேண்டிய களத்தில் தனக்குத் துணையாக எவரேனும் பின்தொடர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியுமோ?”

நீலநாகர் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். மேல் நோக்கி ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய பார்வை கூசித் தாழ்ந்தது. இளங்குமரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சுட்டிக் காட்டப்படுகிற குற்றம் தன்னுடையது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/107&oldid=1231836" இலிருந்து மீள்விக்கப்பட்டது