பக்கம்:மணி பல்லவம் 5.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

896

மணிபல்லவம்

செம்மையும் பொருந்திய அவள் இதழ்கள் அப்போது அவனிடம் பேசுவதற்குச் சொற்களைத் தேடித் துடிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தன. நிலாவிலிருந்து தளிர்த்த தளிர்கள்போல் மென்மையாகவும் பொன்னிற் கொழுந்து முளைத்தாற்போல் கவரும் நிறமுடையனவாகவும் இருந்த அவள் கைவிரல்கள் வணங்குகிற பாவனையில் அவனை நோக்கிக் குவிந்தன. அந்த ஆற்றாமையை, அந்தத் தவிப்பைக் கண்டும் காணாததுபோல எப்படிக் கடந்து மேலே தன் வழியில் போவதென்று புரியாமல் இளங்குமரன் தயங்கி நின்றான். உலகத்திலுள்ள பரிசுத்தமான பூக்கள் எல்லாம் எதிரே வந்து நிற்கும் அவளுடைய உடம்பிலிருந்து மனப்பது போல் ஒரு நறுமணம் சூழ்ந்து கொண்டு கிளர்வதை இளங்குமரன் உணர்ந்தான். அந்தப் பரிமள நறுமணம் வலையைப்போல் தன்னைப் பிணித்து விட முயன்ற வேளைகளை ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டு நன்றாகத் தலைநிமிர்ந்து நிர்ப்பயமாக அவள் கண்களைச் சந்தித்தான். பின்பு வேண்டினான்.

“என்னுடைய வழியை எனக்கு விடு.”

“விட்டுவிடுகிறேன். ஆனால் அப்படி விடுவதற்குமுன் எனக்கு உங்களிடமிருந்து ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில் நானும் உங்களோடு சேர்ந்து நடந்து வர அனுமதி அளியுங்கள். அதற்கு மனம் இல்லா விட்டால் இதே வழியில் விழுந்து சாவதற்காவது ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி இந்த வழியில் விழுந்து இறந்து போனால் அடுத்த பிறவியிலாவது நீங்கள் நடந்து போகிற பாதையில் புல்லாக முளைத்து உங்கள் பாதங்களில் மிதிபடுவேன். இல்லை; இல்லை. புல்லாக முளைத்தாலும் யாராவது வேரோடு பறித்து எறிந்துவிடுவார்கள். கல்லாகவே கிடந்து உங்கள் கால்களில் மிதிபட வேண்டும் நான். உங்கள் கால்கள் என்மீது மிதிபடுகிற ஒவ்வொரு முறையும் அகலிகை மேல் இராமன் திருவடி பட்டதும் நிகழ்ந்ததுபோல் எனக்கு உயிர் வரவேண்டும். உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/114&oldid=1231843" இலிருந்து மீள்விக்கப்பட்டது