பக்கம்:மணி பல்லவம் 5.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

902

மணிபல்லவம்

"ஒருவரிடம் கைகூப்பி ஒரு பொருளை ஈயென இரத்தல் இழிந்ததுதானே?”

“ஆமாம்! இழிந்ததுதான்.”

“இரப்பவருக்கு ஈயமாட்டேனென்று மறுப்பது?”

“அதைவிட இழிந்தது.”

“இழிந்த செயலைச் செய்ய விரும்புவது உயர்ந்த மனிதர்களுக்குத் தகுமா ?”

“தகாது! தகாது!”

“அப்படியானால் நான் கேட்கும் ஒன்றை நீங்கள் எனக்கு ஈந்தருள வேண்டும்...”

“நான் துறவி. என்னிடம் ஈவதற்கு ஒன்றுமில்லை. நானே கொடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பவன்.”

“பொய்! இது பெரிய பொய்! முதன் முதலாக உங்களை மற்போரில் வென்ற வீரராகப் பூம்புகார் கடற்கரையில் சந்தித்தபோது நான் கொடுக்கிறவளாக இருந்தேன். நீங்கள் நான் கொடுத்ததை வாங்கிக் கொள்ள மறுக்கும் அளவு மானத்தின் எல்லையில் போய் நின்று கொண்டு என் பரிசைப் புறக்கணித்தீர்கள். இப்போது நான் உங்களிடமிருந்து பிச்சை கேட்கிறவளாக இருக்கிறேன். கேட்கிற பிச்சையும் அன்புப் பிச்சை. கொடுக்க முடிந்த பிச்சையைத்தான் மண்டியிட்டுப் பணிந்து கேட்கிறேன். இந்தப் பிச்சையையும் கொடுக்க முடியாதென நீங்கள் மறுக்கிறீர்கள். நான் கொடுக்க முடிந்தவளாக இருந்த காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தீர்கள். நான் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிற காலத்தில் நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். நிறைந்த மனமுடையவர்களுக்குக் கொடுக்க மறுப்பதும் இழிவு அல்லவா!”

“ஒன்றுமே இல்லாதவன் எதைக் கொடுக்க முடியும் பெண்ணே ?”

“பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிந்தவர். கொடுப்பதற்கு உங்களிடம் வள்ளன்மை இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/120&oldid=1231849" இலிருந்து மீள்விக்கப்பட்டது