பக்கம்:மணி பல்லவம் 5.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

903

"இருந்தால் கேள். அப்படி இருப்பது எதுவானாலும் தருகிறேன்” இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே தான் மெல்ல மெல்ல அவளுக்குத் தோற்றுக் கொண்டிருப்பது போன்ற தளர்ச்சியை இளங்குமரன் அடைந்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்திரமான கேள்விக்கு முன்னால் தான் பேதையாகிவிட்டாற் போலவும், அவள் தன்னை வீழ்த்தும் புத்திக் கூர்மையைப் படிப்படியாகப் பெற்றுவிட்டாற்போலவும் உணர்ந்து சோர்ந்தான் அவன்.

அதுவரை அழுதுகொண்டிருந்த சுரமஞ்சரி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள். அவள் கண்களில் நளினமான உணர்வுகள் பிறந்தன. அவனுடைய மனத்தின் தளர்ச்சி அவளுக்குப் புரிந்தது.

12. காவிய நாயகன்

அந்த நேரம் தன் வாழ்க்கையில் தனக்கு நல்வினைப் பயன் விளைய வேண்டிய மங்கல வேளையாக இருந்ததனாலோ பூர்வ புண்ணிய வசத்தினாலோ சுரமஞ்சரியின் நாவில் புத்தியும் யுக்தியும் கலந்து திறமை வாய்ந்த சொற்களாகவும், கேள்விகளாகவும் இளங்குமரனை நோக்கிப் பிறந்தன. தன் காதலை இன்னும் அதிக உரிமையோடு நிலைநாட்ட வேண்டும் என்ற துணிவு அவனுடைய சோர்விலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் - என்று சற்று முன் அவனே தன்னிடம் கூறிய சொற்களை நினைத்துக் கொண்டாள் அவள். அந்தச் சொற்களை நினைவு கூர்வதன் மூலம் அவனைத் தானும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடைத்தது. தன்னுடைய விதி நன்றாகத்தான் இருக்கிறது என்றாற்போல் அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/121&oldid=1231850" இலிருந்து மீள்விக்கப்பட்டது