பக்கம்:மணி பல்லவம் 5.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

906

மணிபல்லவம்

செல்வங்களையும்கூட அவளிடம் அவன் தோற்றுப் போய்க் கொடுத்துவிட இசைந்து விட்டான். இந்த முடிவுக்கு வந்த பின் நிர்மலமான உள்ளத்தோடும் எதை இழக்கிறானோ அதை இழக்கிற துன்பமும்கூடத் தெரியாத சிரித்த முகத்தோடும் கீழே குனிந்து சுரமஞ்சரியைப் பார்த்தான் இளங்குமரன். அவள் அவன் காலடியில் பூவாக விழுந்து கிடந்தாள். பூமாலையை எடுப்பது போல் முதன் முதலாக அவளைத் தன் கைகளால் தொட்டுத் துக்கி நிறுத்தினான். அப்படி அவனுடைய கைகள் தன்னைத் தீண்டியபோது சுரமஞ்சரி இந்த உலகத்தில் தன்னைப் போல் பாக்கியசாலி வேறு யாருமே இல்லை என்று எண்ணிப் பெருமிதப்பட்டாள். மேலேயிருந்து யாரோ பணிபுலராத பூக்களை மலை மலையாக அள்ளித் தன்மேல் சொரிவது போல் அவள் உடல் சிலிர்த்தது. அந்த விநாடிகள் முடிவு பெறாமல் நித்தியமாகி அப்படியே பல யுகங்களாகத் தொடர்ந்து வளரலாகாதா என்ற தாபத்தோடு, கண்களில் மகிழ்ச்சி மலர அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான்.

“உன்னுடைய வார்த்தைகளுக்கு நான் தோற்றுப் போய்விட்டேன். என்னுடைய தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேன்.”

“இல்லை! இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள், நான்தான் தொடக்கத்திலிருந்து உங்களுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறேன். என்னுடைய தோல்வி நேற்று வரை அங்கீகரிக்கப்படவில்லை. அது யாரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவரால் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான். இதை என் வெற்றியாகக் கூறினர்களானால் ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் என்று நீங்களே சிறிது நேரத்துக்கு முன் சொன்னாற் போல என் விதி நன்றாக இருந்தது என்பதற்கு மேல் நான் பெருமைப்பட இதில் எனது முயற்சி வேறு ஒன்றுமில்லை...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/124&oldid=1231853" இலிருந்து மீள்விக்கப்பட்டது